Ad Code

Responsive Advertisement

மாணவர் இல்லாத பள்ளிக்கு தலைமை ஆசிரியர்: இரு மாணவருக்கு இரண்டு ஆசிரியர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு தலைமையாசிரியர் ஒருவரும், மற்றொரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களும் பணியில் உள்ளனர் 

அருப்புக்கோட்டையில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 85 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 37 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகள், 7 நடு நிலை பள்ளிகளும், 41 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளும் உள்ளன. ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிகளில் போதிய கட்டடம், கழிப்பறை, குடிநீர், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சமச்சீர் கல்வி மூலம் பாடங்கள் சொல்லி தரப்படுகின்றன. புதிய பாட திட்டங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். ஒரு கி.மீ., துாரத்தில் அடுத்தடுத்த பள்ளிகள் இருப்பதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 5 ம் வகுப்பில் ஒரு மாணவன், 4 ம் வகுப்பில் ஒரு மாணவி என 2 மாணவர்கள் தான் உள்ளனர். இவர்களுக்கு 2 ஆசிரியர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டு இந்த பள்ளி நடக்குமா என்பது கேள்வி குறியாக உள்ளது. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தும் மாணவர்கள் சேர்க்கை இல்லை.

பந்தல்குடி ராமச்சந்திராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. ஆனால் தலைமை ஆசிரியர் மட்டும் தினம் வந்து செல்கிறார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) சக்திவேல், “மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் 2 ஆசிரியர்களில் ஒருவர் வேறு இடத்திற்கு மாறுதல் செய்யப்படுவார். மாணவர்கள் இல்லாத பள்ளிகள் மூடப்படும்,”என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement