Ad Code

Responsive Advertisement

பாடம் எடுக்க மறுத்த ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

ராமேஸ்வரம் அரசு நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்புக்கு பாடம் எடுக்க மறுத்த இரு ஆசிரியர்களை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர். 

ராமேஸ்வரம் புதுரோடு அரசு நடுநிலைப்பள்ளியில் 282 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஜெரோம், பள்ளி மாணவி ஒருவரை மொபைல் போனில் படம் எடுத்ததாகவும், மற்றொரு மாணவியின் தலை முடியை சரி செய்ததாகவும், மாணவர் ஒருவரிடம் கழிப்பறைக்கு தண்ணீர் எடுத்து வர சொன்னதாகவும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்வி குழுவினர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் இல்லாத 5ம் வகுப்பிற்கு ஆங்கிலம், அறிவியல் பாடம் நடத்திட ஆசிரியர்கள் ஜெரோம், ஜலீலாவுக்கு தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். அதற்கு," நாங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் துவக்கப்பள்ளியில் பாடம் நடத்த முடியாது' என கூறியுள்ளனர். இதுகுறித்தும், பொதுமக்கள் அளித்த புகார் குறித்து விசாரித்த மாவட்ட கல்வி அதிகாரி, இரு ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு தற்காலிக(டெப்டேஷன்) இடமாற்றம் செய்தார். பின் ஆசிரியர்களுக்கு நடந்த கலந்தாய்வில், இரு ஆசிரியர்களும் அதே புதுரோடு பள்ளிக்கு இடமாற்றம் பெற்று, கடந்த ஆக. 18 தேதி பணியில் சேர்ந்தனர். இதனை கண்டித்து, நேற்று மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

இதனால் வகுப்பறைகள் வெறிச்சோடி கிடந்தது.

பள்ளி கிராம கல்வி குழு தலைவர் பஞ்சவர்ணம் கூறியதாவது: ஆசிரியர் ஜெரோம் மீது மாணவிகள் கொடுத்த புகாரின் படி, அவரை நாங்களும் பலமுறை கண்டித்தோம். பள்ளி வளர்ச்சிக்கு அக்கறை காட்டாமல், 5ம் வகுப்பில் பாடம் நடத்த மறுத்த ஜெரோம், ஆசிரியை ஜலீலாவை வேறு பள்ளிக்கு மாற்றினர். இருவர் மீது புகார் இருந்த நிலையில் ஆக. 18 தேதி மீண்டும் இதே பள்ளியில் சேர்ந்தனர். இதனை கண்டித்தும், இருவரையும் இடமாற்றம் செய்யக் கோரியும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினோம் என்றார். உதவி தொடக்க கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணி கூறியதாவது: பள்ளிக்குள் ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இரு ஆசிரியர்கள் மீது புகார் வந்துள்ளது. சில புகார்களுக்கு ஆதாரம் இல்லை. இருப்பினும், பிரச்சனைக்கு தீர்வு காண அங்கு பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement