Ad Code

Responsive Advertisement

கவுன்சலிங்கில் கலந்து கொள்ள "ஆன் ட்யூட்டி' சலுகை - ஓ.பி., அடிக்க ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் அதிருப்தி.

பணிமாறுதல் கவுன்சலிங்குக்கு, விண்ணப்பித்தவர்களுக்கு, இரண்டு நாள் வரை ஆன்டூட்டி சலுகை வழங்கப்படுகிறது. பல ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாமல், இச்சலுகையை, "ஓ.பி.,' அடிக்க பயன்படுத்துவதால், தலைமை ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக, ஆண்டுதோறும் பொது இடமாறுதல் கவுன்சலிங் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், அனைத்து மாவட்டங்களிலும், ஆக., 12ம் தேதி துவங்குகிறது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த ஆக., 7ம் தேதி வரை ஆசிரியர்களிடம்இருந்து பெறப்பட்டது.

தொடக்கக்கல்வித்துறையில், ஒன்றியம், மாவட்டம் மற்றும் மாவட்டத்துக்கு வெளியே என, மூன்று பிரிவாக நடக்கும் கவுன்சலிங்கில், இரண்டில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த கவுன்சலிங் நடக்கும் தினங்களில், பள்ளிகளில், "ஆன் ட்யூட்டி' அனுமதிக்க விதிமுறை உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கவுன்சலிங் தினத்தில், உண்மையிலேயே மாறுதல் பெற விரும்பாத ஆசிரியர்களும், "ஆன் ட்யூட்டி' சலுகைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதனால், பள்ளிகளில் அன்றைய தினம், ஆசிரியர்கள் இல்லாமல், தலைமை ஆசிரியர்கள் தவிக்கும் நிலை உருவாகிறது.

இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கவுன்சலிங்கில் கலந்து கொண்டு, மாறுதல் பெறும் ஆசிரியர்களுக்காக,"ஆன் ட்யூட்டி' சலுகையும், வேறு இடத்தில் சேர்வதற்கான கால அவகாசமாக, 5 நாள் சலுகையும் வழங்கப்படுகிறது. இதை பெற வேண்டும் என்பதற்காகவே, பல ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் விண்ணப்பிக்கின்றனர். கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்தவர்கள், வேறு இடங்களுக்கு மாறுதல் பெற வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால், கவுன்சலிங் முடிந்ததும் மீண்டும் பழைய பள்ளிக்கே வந்துவிடுகின்றனர். கடந்த, ஏழு ஆண்டுகளாக,ஒரு ஆசிரியர் ஆண்டுதோறும் கவுன்சலிங்குக்கு விண்ணப்பித்து, இரு நாள் ஆன்ட்யூட்டியில் பள்ளிக்கு வருவதில்லை.

அதே சமயம், மாறுதலும் பெறவில்லை. இதே போல், ஏராளமான ஆசிரியர்கள், ஓ.பி., அடிக்கின்றனர். உதாரணமாக, 400 பேர் விண்ணப்பித்திருந்தால், 100க்கும் குறைவாகவே பணிமாறுதல் பெறுகின்றனர்.இதனால், அன்றைய தினம் பள்ளிகளில் கல்விப்பணிகள் பாதிக்கப்படுகின்றன. பணிமாறுதல் பெறாத ஆசிரியர்களின் ஆன் ட்யூட்டி சலுகையை விடுமுறையாக கழிக்கும் வகையில், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, தேவையில்லாமல், ஓ.பி., அடிப்பதை தடுக்க முடியும். கல்விப்பணிகளும் பாதிக்காமல் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement