Ad Code

Responsive Advertisement

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.

கடந்த நிதியாண்டுக்கான (2014-15) வருமான வரிக் கணக்கை சம்பளதாரர்களும், ஓய்வூதியதாரர்களும் தாக்கல் செய்ய வசதியாக, சென்னை, நுங்கம்பாக்கம் வருமான வரி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக 27) சிறப்பு கவுன்ட்டர்கள் தொடங்கப்பட்டன. சென்னை மக்களுக்கு 30 கவுன்ட்டர்கள், காஞ்சிபுரம் மக்களுக்கு 4 கவுன்ட்டர்கள் என மொத்தம் 34 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டன.


தாம்பரம் பகுதிக்கு உள்பட்டு வருமான வரி செலுத்துவோர், தாம்பரம் வருமான வரி அலுவலகத்தில்தான் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித் துறை அறிவித்திருந்தது.

சிறப்பு கவுன்ட்டர்களில், நான்கு நாள்களில் சென்னையில் மட்டும் இதுவரை 10,000 பேர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் ஜூலை வரை, சிறப்பு கவுன்ட்டர்களில் தமிழகம் முழுவதும் மொத்தம் 75,503 பேர் வருமான வரித் தாக்கல் செய்தனர். இவற்றில் சென்னையில் 35,184 பேரும், மற்ற பகுதிகளில் 39,562 பேரும் அடங்குவர். நிகழாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த நிதியாண்டு, ரூ. 5 லட்சத்துக்குக் கீழ் வருமானம் உள்ளோர், வருமான வரிப் பிடித்தத் தொகையை (டிடிஎஸ்) திரும்பக் கோராதோர் மட்டுமே, இந்தச் சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிறப்பு கவுன்ட்டர்களில் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கான கடைசி நாளான திங்கள்கிழமை (ஆகஸ்ட் 31) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement