Ad Code

Responsive Advertisement

இழுபறியில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் :ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் நிதி இழப்பு

மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடத்தை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றோர் ஓய்வூதிய பணப்பலன் இன்றி ஓய்வு பெறும் நிலை நீடிக்கிறது.மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக்., பள்ளி ஆய்வாளர் பணியிடம் 75 சதவீத பதவி உயர்வு மூலமும், 25 சதவீத நேரடி நியமனம் மூலமும் நிரப்பப்படுகிறது. தமிழகம் முழுவதும் 124 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்டம் தோறும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களுக்கான முன்னுரிமை பட்டியல் கோரப்பட்டது. அப்போது 40 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தது. அதற்கு பிந்தைய நாட்களில் ஓய்வு பெற்று பலர் சென்று விட்டதால், தற்போது 70-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படாமல் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பொறுப்பு பணியாக மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு பொறுப்பு என நியமிக்கப்பட்டவர்களில் பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். இதனால், பொறுப்புக்கு பிந்தைய பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று வருவதால், மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்குரிய ஓய்வூதிய பலன்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தலைமை ஆசிரியர் ஒருவர் கூறும்போது: மாவட்ட கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஆறு மாதங்களுக்கு முன்பு முன்னுரிமை பட்டியல் கோரப்பட்டிருந்தது. அதை தொடர்ந்த காலங்களில் பட்டியல் கோரப்படவில்லை. ஏற்கனவே பட்டியலில் பெயர் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்காததால் அவர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.

மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்படுபவர்கள் வேறு மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் பெற்று செல்ல வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. இதனால், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இப்பணியிடத்துக்கு வருவதில்லை. இதை தவிர்க்க ஆசிரியர்களுக்கு நடத்துவது போல் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் நேரடி கலந்தாய்வை நடத்த வேண்டும். அப்போது அவர் சார்ந்த மாவட்டத்தில் பணியாற்றுவதோடு, விரைந்து செயலாற்றவும் வாய்ப்பு உள்ளது, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement