Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறுவதை ஒட்டி, தமிழகத்தில் அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யாவின் அனுமதியுடன் பொதுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இது குறித்து பொதுத் துறை வெளியிட்ட அறிவிப்பு: மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் காலமானார் என்ற செய்தியை அறிந்து, தனது ஆழ்ந்த இரங்கலை தமிழக அரசு தெரிவிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

மறைந்த அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் வருகிற வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. இதையொட்டி, அனைத்து அரசு-தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்களுக்கும் வியாழக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

மறைந்தவர், குடியரசு முன்னாள் தலைவர் என்பதால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாற்று முறை ஆவணச் சட்டம் 1881-இன் கீழ் (Negotiable Instruments Act 1881) விடுமுறை விடப்படுவதாக பொதுத் துறையின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியத்துடன் கூடிய விடுமுறை: மாற்று முறை ஆவணச் சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அன்றைய தினத்துக்கான ஊதியம் அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement