Ad Code

Responsive Advertisement

விடுமுறை நாளில் கூடுதல் வேலை: கலாம் வேண்டுகோள் நிறைவேற்றம்

முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாமின் வேண்டுகோளை ஏற்று, கேரளாவிலுள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், விடுமுறை நாட்களிலும், கூடுதல் நேரம் வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

'என்னை விரும்புவோர், விடுமுறைக்கு பதிலாக, ஒரு நாள் அதிகமாக வேலை செய்யுங்கள்' என, கலாம் கூறியிருந்த வாக்குகளை நினைவுகூர்ந்து, கேரளாவில், பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள், நேற்று முன்தினம், பல மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்தனர்.
புன்னபிரா வடக்கு பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று முன்தினம், ஏழு மணி நேரம் கூடுதலாக வேலை செய்தனர். கல்லேற்றும்கரை ரயில் நிலைய டிக்கெட் ரிசர்வேஷன் கவுன்டர் ஊழியர்கள், ஒரு மணி நேரம் கூடுதலாக பணிபுரிந்தனர். 

விடுமுறை தினமான, வரும் ஆக., 2ம் தேதி, பாலக்காடு நகராட்சி செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 'அன்றைய தினம், அனைத்து சேவைகளும் நகராட்சியிலிருந்து கிடைக்கும்; அன்று, அனைத்து பணியாளர்களும் இருப்பர். மக்கள் பிரதிநிதிகளும், நகராட்சியில் இருப்பர்' என, நகராட்சி தலைவர் ராஜேஷ் கூறினார். கலாமின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்க, இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியதற்கு, ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர்.

பெரும்பாலான ஐ.டி., நிறுவனத்தினரும், அதிக நேரம் பணிபுரிய முன்வந்துள்ளனர். கலாமின் விருப்பத்தை ஏற்று, கேரளாவில் நேற்று முன்தினம் திட்டமிடப்பட்டிருந்த விடுமுறை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கேரளாவில் உள்ள மகளிர் வளர்ச்சி கூட்டுறவு சங்க ஊழியர்கள், வரும் ஞாயிற்றுக் கிழமை வேலை செய்ய முடிவெடுத்துள்ளனர். இச்சங்கத்தின் கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும், ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.
குல்சு, சங்க தலைவி

தமிழக அரசு ஊழியர் தயாரில்லை?

கேரளாவில், கலாம் அறிவுரையை ஆர்வத்துடன் செயல்படுத்த துவங்கி உள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் நிலைப்பாடு குறித்து, பல்வேறு சங்க நிர்வாகிகளிடம், கருத்தை அறிய முயன்றபோது, 'ஆளை விடுங்க' என, தலைதெறிக்க ஓடினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement