Ad Code

Responsive Advertisement

டூவீலர் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும் 'ஹெல்மெட்' கட்டாயம்

அடுத்த மாதம், முதல் தேதி முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோர் மற்றும்உடன் பயணிப்போர், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது; பின் இருக்கையில், பெண்கள் அமர்ந்திருந்தால், அவர்களும் கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.
'தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், ஜூலை முதல் தேதி முதல்,கட்டாயம், 'ஹெல்மெட்' அணிய வேண்டும். இதை தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம், சமீபத்தில் உத்தர விட்டது.


பறிமுதல்:


இதை அமல்படுத்த முடிவு செய்த தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவு, அடுத்த மாதம் முதல் தேதி முதல், அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.


இது தொடர்பாக, தமிழக உள்துறை முதன்மை செயலர் அபூர்வா வர்மா வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


ஜூலை முதல் தேதி முதல், இரு சக்கர வாகனங்களை ஓட்டி செல்வோரும், அதில் பயணிப்போரும், கண்டிப்பாக 'ஹெல்மெட்' அணிய வேண்டும்.தவறினால், மோட்டார் வாகன சட்டம் - 1988, பிரிவு 206ல் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனத்தின், அனைத்து ஆவணங்கள், ஓட்டுனர் உரிமம், ஆகியவை பறிமுதல் செய்யப்படும்.இந்திய தர நிர்ணய சான்று பெற்ற, புதிய, 'ஹெல்மெட்' மற்றும் அதை வாங்கியதற்கான ரசீது, ஆகியவற்றை காண்பித்தால் மட்டுமே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் விடுவிக்கப்படும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருசக்கர வாகனங்களில், பெரும்பாலும் பெண்கள் தான் உடன் பயணிக்கின்றனர். எனவே,அவர்களுக்கும், 'ஹெல்மெட்' கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


சட்டம் சொல்வது என்ன?


*மோட்டார் வாகன சட்டம் - 129ன் படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும், 'ஹெல்மெட்' அணிவது அவசியம்.


*மோட்டார் வாகன சட்டப்படி, 'ஹெல்மெட்' இன்றி இரு சக்கர வாகன ஓட்டுபவருக்கு முதலில், 100 ரூபாய்; தொடர்ந்து விதியை மீறும் பட்சத்தில், 300 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்.


*சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தற்போது தமிழக அரசு, 'ஹெல்மெட்' கட்டாயம், இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள்பறிமுதல்' என அறிவித்துள்ளது.'ஹெல்மெட்' அணிவது கட்டாயம் என்றாலும், அதை அணியாவிட்டால், அபராதம் வசூலிக்க தான், சட்டத்தில் இடம் உள்ளது என்கின்றனர் வழக்கறிஞர்கள்.


இதுகுறித்து, வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறியதாவது:அச்சுறுத்தும் நடவடிக்கையாக, அரசின் அறிவிப்பு உள்ளது. உயிர் பாதுகாப்புக்கு தலை கவசம் அணியவேண்டும் என, சட்டமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ளது.ஆனால், 'ஹெல்மெட்' அணியாவிட்டால், ஆவணங்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என, சட்டத்தில் கூறப்படவில்லை.சட்டப்படி, அபராதம் வசூலிக்கலாம்; வாகன ஓட்டிகளை, 'ஹெல்மெட்' முக்கியத்துவத்தை உணரச் செய்ய வேண்டும்.இவ்வாறு, வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement