Ad Code

Responsive Advertisement

அரசு காப்பீட்டு திட்டங்கள், ஒரு பார்வை

அனைத்து மக்களுக்கும் பரவலாக காப்பீடு சென்று அடைய வேண்டும் எனும் நோக்கத்துடன் மத்திய அரசு சார்பில் மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அரசு காப்பீட்டு திட்டங்களை, பொதுத்துறை வங்கிகள் மட்டும் அல்லாமல் தனியார் வங்கிகளும் ஆர்வத்துடன் முன்வைத்து உறுப்பினர்களை சேர்த்து வருகின்றன. இந்த திட்டங்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் பலன்கள் பற்றி ஒரு பார்வை...

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா: இது ஒரு 'டெர்ம் இன்சூரன்ஸ்' திட்டம். ஓராண்டுக்கானது. ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்ளலாம். வங்கியில் சேமிப்பு கணக்கு உள்ள, 18 முதல் 50 வயது வரை உள்ள எவரும் இதில் சேரலாம். இதற்கான பிரீமியம் தொகை, 330 ரூபாய். ஆகஸ்ட் 31 வரை இதில் சேரலாம். தேதி, மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். 

இந்த திட்டத்தில் சேர மருத்துவச் சோதனைகளோ, பெரிய அளவில் ஆவணங்களோ தேவையில்லை. எனவே, எளிதாக இந்த திட்டத்தில் சேரலாம். டெர்ம் இன்சூரன்சுக்கான பாலிசி தொகை, ஒருவரின் ஆண்டு வருமானத்தைப் போல, 10 மடங்காக இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த திட்டம், மாதம், 2,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கே ஏற்றதாக இருக்கும்.மேலும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பிரீமியம் தொகை மாறுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா: இது, விபத்து காப்பீட்டு திட்டம். விபத்து மூலம் ஏற்படக்கூடிய உயிர் இழப்பு மற்றும் நிரந்தர உடல் ஊனத்திற்கான பாலிசி இது. 18 வயது முதல், 70 வயதான எவரும் இதில் சேரலாம். பிரீமியம் தொகை ஆண்டுக்கு, 12 ரூபாய் மட்டுமே. பாலிசிதாரரின் வங்கி கணக்கில் இருந்து பிரீமியம் தொகை பிடித்துக் கொள்ளப்படும். 

குறைந்த கட்டணத்தில் விபத்து காப்பீடு என்பது சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அல்லது இரு கண்கள் அல்லது இரு கைகள் அல்லது இரு கால்கள் இழக்கும் நிலை ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

அடல் பென்ஷன் யோஜனா: இது, ஓய்வூதிய திட்டம். முறைசாரா துறையில் பணியாற்றுபவர்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. 18 வயது முதல், 40 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். குறைந்தபட்சம், 20 ஆண்டுகளுக்கு இதில் பங்கேற்க வேண்டும். உறுப்பினர்கள் மாதந்தோறும் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, 60 வயதுக்கு பிறகு, மாதம் 1,000, 2,000, 3,000, 4,000 மற்றும் 5,000 ரூபாய் வரை கிடைக்கும். பாலிசிதாரர் இறந்துவிட்டால், அவரது கணவர் அல்லது மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும். 

இந்த திட்டத்தின் கீழ் அரசும், 2020ம் ஆண்டு வரை குறிப்பிட்ட தொகையை செலுத்தும். மொத்த தொகையின், 50 சதவீதம் அல்லது 1,000, இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதை அரசு செலுத்தும். ஜூன் முதல் டிசம்பர் வரையான காலத்தில் சேருபவர்களுக்கு இது பொருந்தும். வேறு எந்த சமூக பாதுகாப்பு திட்டத்திலும் சேராதவர்கள் மற்றும் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு மட்டுமே, இந்த சலுகை பொருந்தும்.

எனினும் தேசிய பென்ஷன் திட்டம் போல இதில் உறுப்பினர்கள் முதலீட்டு முறையை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பில்லை. முறைசாரா துறையில் இருப்பவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கச் செய்வது நல்ல விஷயம் என்றாலும், 20 ஆண்டுகளுக்குப்பின், பணவீக்கத்தை கணக்கிட்டுப் பார்த்தால், ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவு எனக் கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement