Ad Code

Responsive Advertisement

பள்ளி அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்

பள்ளி அங்கீகாரம் பெறுவதற்கான காலக்கெடுவை  நீட்டிக்க வேண்டுமென அனைத்து மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழ்நாடு அனைத்து மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கூட்டத்திற்கு, திருப்பூர் மாநகர் மாவட்ட துணைத் தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் அசோக்பாண்டியன், மணி, பிரகாஷ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்டப் பாதுகாப்பு பேரவைத் தலைவர் அபுபக்கர் சித்திக், பொதுச்செயலாளர் சந்திரசேகர், திருப்பூர் மாவட்டத் தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  தமிழக அரசின் கல்வித்துறை முதன்மைச் செயலரால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மழலையர் பள்ளி வரைவு விதிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. விதி 7 (அ)-இன்படி ஏற்கெனவே செயல்பட்டு வரும் மழலையர் பள்ளி அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 3 மாதத்திலிருந்து 6 மாதங்களாக நீட்டிக்க வேண்டும்.
  விதி 7 (ஆ)-இன் படி, புதிய பள்ளிகள் துவக்குவதற்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி, துவக்கப்பட்ட மூன்று மாதத்திற்குள் விண்ணப்பிக்க  என உத்தரவிட வேண்டும். பள்ளி கட்டட வாடகை அல்லது குத்தகை காலம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் என்பதை மாற்றி 3 ஆண்டுகளாகவும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் பெற வேண்டும் எனவும் மாற்ற வேண்டும்.
 வாடகை அல்லது குத்தகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நீக்க வேண்டும். பள்ளிக் கட்டடம் கான்கிரீட் ஆக இருக்க வேண்டும் என்பதிலும், ஒரு மாணவருக்கு குறைந்தபட்சம் 10 சதுர அடி அளவு என்பதிலும் மாற்றம் செய்ய வேண்டும். பள்ளி ஆசிரியர்களை, ஊழியர்களை நியமிக்கும்போது அவர்களின் குற்ற பின்னணி குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும், காவல்துறையிடமிருந்து நற்சான்றிதழ் பெற வேண்டும் என்பதையும் நீக்க வேண்டும்.
 பள்ளி பதிவுக் கட்டணம், புதுப்பித்தல் கட்டணம், ஆய்வுக்கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் குறித்து தெளிவுப்படுத்த வேண்டும். மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் விகிதம் குறித்து மாவட்ட கல்வி நிர்வாகமே நிர்ணயம் செய்ய வேண்டும்.
  ஏற்கெனவே செயல்பட்டு வரும் அனைத்து மழலையர் பள்ளிகள் பற்றிய முழுமையான தகவல்களை அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில்
தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement