Ad Code

Responsive Advertisement

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த ஓராண்டுக்குள் சட்டம்: உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி துறை தகவல்

அனைத்து தனியார் பள்ளிகளுக்கான, ஒருங்கிணைந்த சட்டத்தை கொண்டு வர, ஓராண்டு காலம் அவகாசம் தேவை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்தது.மனு: விசாரணை' மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான விதிமுறைகள், செல்லாது' என, அறிவிக்க வேண்டும். சென்னை மற்றும் மதுரை பல்கலைக் கழகங்களால்,1976 ஜூன் 1ம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை தவிர,மற்ற மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக்கல்வித் துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனு:

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், அதாவது, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன்பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு என, ஒருங்கிணைந்த சட்டத்தை வகுக்க, உயர்மட்டக் குழுவை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டது.இதையடுத்து, சட்டம் கொண்டு வர, எவ்வளவு கால அவகாசமாகும் என்பதை, நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி கூறினார். அதை தொடர்ந்து, விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கு, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் கிருஷ்ணகுமார் ஆஜராகி, அரசின்முதன்மை செயலர் அனுப்பிய கடிதத்தை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: அனைத்து தனியார் பள்ளிகளுக்கான புதிய சட்டத்தை வகுப்பதற்கு, நிபுணர் குழு அமைத்த பின், ஆறு மாதங்களுக்குள், அந்த குழு பரிந்துரை அளிக்கும்.அந்த பரிந்துரை குறித்து, பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக, அவர்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தரப்பில் இருந்து ஆட்சேபங்கள் வந்தால், அதை பரிசீலித்து, ஒருங்கிணைந்த சட்டத்தை இறுதி செய்து, சட்டசபையின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்படும்.

அவகாசம் தேவை: 

இந்த ஒருங்கிணைந்த சட்டத்தை, இறுதி செய்யும் நடவடிக்கைகளுக்காக, ஓராண்டு காலம் தேவை.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.இதை பரிசீலித்த, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வருவதற்கு, ஓராண்டு காலம் அவகாசம் தேவை என, அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது. தேவையின்றி காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, நிபுணர் குழு அமைப்பதற்கு,ஒரு குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.ஒரு மாதத்திற்குள், நிபுணர் குழுவை அரசு அமைக்கும் என, நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

மெட்ரிக் பள்ளிகளில் 'ரெய்டு' 500 குழுக்கள் அமைப்பு:

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், இலவச மாணவர் சேர்க்கை தொடர்பாக, தனியார் மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகளில் நேரடி சோதனை நடத்த, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் சார்பில்,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், இரண்டு நாட்களில் ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், கட்டாய கல்விச் சட்டப்படி, தமிழக தனியார் பள்ளிகளில், நுழைவு வகுப்பான எல்.கே.ஜி.,யில் கட்டணமின்றி, 25 சதவீத ஏழை மற்றும் நலிந்த பிரிவு மாணவர்களைச் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த, இரண்டு கல்வி ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்காக, தனியார் பள்ளிகளுக்கு, 97 கோடி ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. 'இந்த நிதியை சரியாக வினியோகிக்க வேண்டும்; எந்த விதத்திலும் முறைகேடு நடக்கக் கூடாது' என,மெட்ரிக் பள்ளி இயக்குனரகத்துக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.அதனால், தனியார் மெட்ரிக் மற்றும் பிரைமரி பள்ளிகளில் நேரடியாக சோதனை நடத்த, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு இயக்குனர் பிச்சை உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், 10 மெட்ரிக் பள்ளிகளுக்கு ஒரு குழு வீதம், மாநிலம் முழுவதும், 500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுவில், மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர், அரசு உயர்நிலை அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக பிரதிநிதிஉள்ளிட்டோர் உறுப்பினராக உள்ளனர். சென்னையில் மட்டும், 45 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர், தனியார் பள்ளிகளுக்கு நேரில் சென்று, கடந்த, இரண்டு கல்வி ஆண்டுகளின் மாணவர் பதிவேடு, கட்டண ரசீது புத்தகம், நன்கொடை புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்து, அதன் நகல்களை பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மெட்ரிக் அதிகாரிகள் கூறியதாவது:இலவச மாணவர் சேர்க்கையில், நன்கொடை மற்றும் கல்விக் கட்டணம் வசூலித்திருந்தால், அந்த கட்டணம் மாணவர்களுக்கு திருப்பித் தரப்பட வேண்டும்.இதற்காக, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம், 'கல்விக் கட்டணம் திருப்பித் தரப்பட்டது' என்ற உறுதி மொழிப் படிவம் பெற்ற பின், அரசின் மானிய நிதியை வழங்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement