Ad Code

Responsive Advertisement

ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள்

அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக இருந்தது. வினாத்தாளில், 'பேஸ்புக்'கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்றிருந்தது.

அரசுப் பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பதவிக்கு, 4,362 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; 1,800 மையங்களில், 8.87 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆண், பெண் தேர்வர்களுக்கு, தனித்தனியே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, நண்பகல், 12:30 மணிக்கு முடிந்தது.

தேர்வு மையங்களில், போலீஸ் பாதுகாப்பு மட்டு மின்றி, 5,000த்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பறக்கும் படையிலும், 44 ஆயிரம் பேர் கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர். இத்தேர்வில், ஒரு தரப்பினருக்கு வினாத்தாள் கடினமாகவும், மற்றொரு தரப்புக்கு வினாத்தாள் எளிதாகவும் இருந்தது.தேர்வு எழுதிய சென்னையைச் சேர்ந்த கவிதா கூறுகையில், ''நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்; என்னைப் போன்றோருக்கு வினாத்தாள் கடினமாகவே இருந்தது,'' என்றார்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீமதி கூறுகையில், ''சமச்சீர் கல்வி, 10ம் வகுப்புப் பாடப்புத்தகத்தை படித்திருந்ததால், வினாத்தாள் எளிதாக இருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன், 10ம் வகுப்பு முடித்திருந்தால், அவர்களுக்கு இது கடினம்,'' என்றார்.மண்ணடியைச் சேர்ந்த கல்பனா, ஷியாமளா மற்றும் அக் ஷய்குமாரியும் கூறுகையில், 'நாங்கள், இந்த ஆண்டுதான் பட்டப்படிப்பு முடித்துள்ளோம்; எங்களுக்கு வினாத்தாள் எளிதாகவே இருந்தது. அறிவியல் தொடர்பான கேள்விகள், அதிகளவில் இடம் பெற்றிருந்தன' என்றனர்.
நேற்றைய தேர்வில், 40 பக்கங்களில், 150 கொள்குறி (அப்ஜெக்டிவ்) வினாக்கள் இடம் பெற்றன. 'பேஸ்புக்' தளத்தை உருவாக்கியவர் யார்; டில்லி - மும்பையை இணைக்கும் நெடுஞ்சாலை எது; 2014ல் அமைக்கப்பட்டது எத்தனையாவது மக்களவை; இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் யார்; மலாலாவுடன் நோபல் பரிசை பெற்றவர் யார் போன்ற, 30க்கும் குறைவான பொது அறிவுக் கேள்விகளே இடம் பெற்றிருந்தன.
நாடுகளின் தலைநகர்தேர்வர்கள் 'கிறுகிறு': ஆய்வக உதவியாளர் தேர்வு வினாத்தாளில், 78வது கேள்வியாக சில நாடுகளின் தலைநகரப் பெயர்கள் கேட்கப்பட்டு உள்ளன. ஹங்கேரி, கிர்கிஸ்தான், லித்துவேனியா மற்றும் மடகாஸ்கர் போன்ற நாடுகளின் பெயர்கள், பெரிய அளவில் பிரபலமாகாதவை என்பதால், தேர்வர்கள் கடும் குழப்பம் அடைந்தனர்.
தேர்வர்கள் சிலர் கூறுகையில், 'இந்த நாடுகளின் பெயர்களைப் பார்த்ததுமே தலை சுற்றி விட்டது. கடினமாக கேட்க வேண்டும் என்பதற்காக, அறியப்படாத நாடுகளின் தலைநகரைக் கேட்டிருக்க வேண்டாம்' என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement