கழுத்தின் முன்பகுதியில் 15 முதல் 20 கிராம் எடையுள்ள தைராய்டு சுரப்பி, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் இயங்க உதவுகிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.தைராய்டு சுரப்பி குறைந்தாலும், அதிகமானாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். 12 சதவீத இந்தியர்கள், தைராய்டு குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு சதவீத இந்தியர்கள் அறிகுறி தெரியாத தைராய்டு குறைபாட்டால் அவதிப்படுகின்றனர்.
குறைபாட்டின் அறிகுறிகள் உடல்பருமன், சோம்பல், உடல் தளர்ச்சி, உடல் அயர்ச்சி, தலைவலி, அடிக்கடி தூங்கிக் கொண்டே இருத்தல், வேகமாக செய்ய வேண்டிய வேலைகளை மிக மெதுவாக, தாமதமாக செய்தல், ஞாபக மறதி மற்றும் மூளை செயல்பாடு குறைதல், நடையில் தள்ளாட்டம், கை, கால் மதமதப்பு மற்றும் எரிச்சல், மனச்சோர்வு, குளிர் தாங்கும் தன்மை குறைதல், உலர்ந்த தடிமனான தோல், வியர்க்கும் தன்மை குறைதல், முடி உதிர்தல், முடி வளரும் வேகம் குறைதல் ஆகியவை.
ரத்தக்கொதிப்பு நோய், இருதய வீக்கம், இருதயத்தைச் சுற்றி நீர் அடைபடுதல், இருதயத்துடிப்பு குறைதல், நல்ல கொழுப்பு குறைதல், கெட்ட கொழுப்பு அதிகமாதல், நுரையீரல் சுருங்கி விரியும் தன்மை குறைதல், நுரையீரலை சுற்றி நீர் அடைதல், குறட்டை விடுதல், மலச்சிக்கல், உணவு செரிக்கும் தன்மை குறைதல், கால்சியம் சத்து குறைபாடு, எலும்பு அடர்த்தி குறைபாடு, மாதவிடாய் கோளாறு, ரத்தசோகை, பெண்களுக்கு குழந்தையின்மை, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுதல். இந்த அறிகுறிகள் இல்லாமலே கூட தைராய்டு குறைபாடு ஏற்படலாம்.
அயோடினும் தைராய்டும்
நாம் உண்ணும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஏற்படலாம். மலை சார்ந்த இடம் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள மண்ணில் அயோடின் குறைந்தளவே இருக்கும். இப்பகுதியில் தைராய்டு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம். தைராய்டு கழலை நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும், மருத்துவரை அணுகி தைராய்டு சோதனை மேற்கொள்ள வேண்டும்.டி3, டி4, டி.எஸ்.எச்., சோதனைகள் மூலம் சுலபமாக தைராய்டு குறைநிலையை அறிந்து கொள்ளலாம். தைராய்டு குறைநிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு மனவளர்ச்சி மற்றும் உடல்வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு உள்ளது.கடைப்பிடிக்கும் முறைகள்
முள்ளங்கி, முட்டைகோஸ் உணவுகளை தவிர்க்க வேண்டும். அயோடின் கலந்த உப்பை மட்டும் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனை படி தைராக்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். காலையில் மறந்து விட்டால் மதியமோ, இரவோ உணவு உட்கொள்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக மாத்திரை உட்கொள்ள வேண்டும்.
தைராக்சின் மாத்திரை சாப்பிடும் போது இரும்புச்சத்து மற்றும் வயிற்றுப் புண்ணுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டசிட் மாத்திரைகள், ஆன்டசிட் ஜெல் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாள் ஒரு மாத்திரை எடுக்க மறந்து விட்டால், அடுத்தநாள் இரண்டு மாத்திரை போடலாம். இந்த மாற்றம் ஒருநாளுக்கு மட்டும் தான் பொருந்தும்.தைராய்டு கழலைநோய்
கழுத்தின் முன்பகுதியில் கட்டி போன்று எச்சில் விழுங்கும் போது மேலும் கீழுமாக சென்று வந்தால், அது தைராய்டு கழலை. இதற்கு பல காரணங்கள் உண்டு. அயோடின் சத்து குறைவு, தைராய்டு குறைவு, தைராய்டு மிகைநிலை, தைராய்டு புற்றுநோய், தைராய்டு சுரப்பி தொற்றுநோய் காரணமாக இருக்கலாம்.
கவனிக்க வேண்டியவை தைராய்டு பரிசோதனையை வெறும் வயிற்றில் எடுக்க வேண்டியதில்லை. எந்தநேரமும் செய்யலாம். இருதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் பாதிப்பாலும் தைராய்டு ஹார்மோன் அளவில் சிறிதளவு மாற்றம் ஏற்படலாம். எனவே மருத்துவர் ஆலோசனைப்படி தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.நீங்கள் தைராக்சின் மாத்திரை உட்கொள்கிறீர்களா. எத்தனை மாத்திரை, எவ்வளவு அளவு என்பதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். மற்ற நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், தைராய்டு பரிசோதனையில் மாற்றம் ஏற்படுத்தும். எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் அனைத்து மாத்திரைகளையும் மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.தைராய்டு சுரப்பி இறைவன் நமக்கு கொடுத்த கேடயம். அந்த குறைநிலையை அறிந்து சிகிச்சை மேற்கொண்டு உடல்நலத்தையும் மனநலத்தையும் பாதுகாப்போம்.
- டாக்டர்.ஜெ.சங்குமணிஅகச்சுரப்பியல் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர், மதுரை.
98432 72876.
வாசகர்கள் பார்வை
விலை மதிப்பில்லா கருத்துஎதிர்பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் கட்டுரைகளாக தரும் என் பார்வை வாசகர்களாகிய எங்கள் மனம் கவர்ந்த பகுதி. ஒவ்வொரு தகவல்களும் விலை மதிக்க முடியாத அளவிற்கு அருமையாக இருக்கிறது. படித்து படித்து அறிவை வளர்க்கும்
அற்புதமான பகுதி.- எம். குகன், மதுரை.
விழுந்தால் தானேநடக்க முடியும்
சவுந்தர மகாதேவன் எழுதிய 'தோல்வி நிலையென நினைக்கலாமா' கட்டுரையில், மனம் தளராதவரை சங்கடங்கள் வருவதில்லை. குழந்தைகள் கீழே விழுந்து தானே நடக்க ஆரம்பிக்கின்றன. கவலை கோரமான வலை போன்ற வரிகள் சிறப்பானவை. கட்டுரை முழுவதும் அருமை செய்திகளே. கட்டுரையாளருக்கும், தினமலர்நாளிதழுக்கும் நன்றி.- என்.எஸ்.எம்.ராஜா, ராஜபாளையம்.
விவசாய வளர்ச்சி
என் பார்வையில் வந்த 'வறுமை ஒழிய விவசாயம் வளர வேண்டும்' கட்டுரை படித்தேன். நம் நாட்டின் விவசாயிகளின் வறுமை நிலை குறித்து படம் பிடித்துக் காட்டியுள்ளார். விவசாயத்தில் மற்ற நாடுகளை போல நம் நாடும் வளர வேண்டும் என்பதை உணர்த்தியது.
- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.
சமூக அக்கறை
என் பார்வையில் வெளியான 'மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்' கட்டுரை படித்தேன். தேர்வு காலங்களில் இதுபோன்ற கட்டுரைகளை வெளியிடுவது பொருத்தமாக உள்ளது. இத்துடன்
மாணவர்களின் தன்னம்பிக்கையைவளர்க்கவும் பயன்படுகிறது. சமூக அக்கறையுடன் வெளியாகும் என் பார்வைக்கு என் பாராட்டுக்கள்.- சே.மணிகண்டன், தேனி.
கல்வி விழிப்புணர்வு
என் பார்வையில் வெளியான'மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்' கட்டுரை படித்தேன். தொழில் கல்வியுடன் கூடிய கல்வியே வேலையில்லா திண்டாட்டத்தை போக்கும். கல்விவிழிப்புணர்வு ஏற்படும் வகையில் கட்டுரையை எழுதியிருக்கிறார் கட்டுரையாளர்.- ரா.ரங்கசாமி, வடுகப்பட்டி.
தெளிவான பார்வை
என் பார்வையில் வெளியான 'வறுமை ஒழிய விவசாயம் வளர வேண்டும்'கட்டுரை படித்தேன். அதில் இந்தியாவில் பெரும்பாலான மக்களின் வறுமை நிலை மாறும் என்று தோன்றியது.
கட்டுரையாளரின் தெளிவான பார்வை படிப்பவர்களை சிந்திக்க வைத்தது வாழ்த்துக்கள்.- மு.பால்சாமி, சிவகங்கை.
மதிப்பெண் வலியுறுத்தல்
என் பார்வையில் வெளியான 'மதிப்பெண் இயந்திரமா மாணவர்கள்' கட்டுரை படித்தேன். அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். இந்நிலையில் அதிக மதிப்பெண்
எப்படி எடுப்பார்கள் என்பதை யோசிக்க வேண்டும். இது போன்ற மாணவர்களின் மதிப்பெண் பிரச்னைகளை வலியுறுத்திய என் பார்வைக்கு பாராட்டுக்கள்.- வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை