Ad Code

Responsive Advertisement

உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு... : அரசு இலவச பாடப்புத்தகம் கிடைக்குமா?

மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகம் உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு அரசு கல்வித் துறைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் கற்றலின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு சீருடை, காலணி, புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர் பென்சில், புத்தகப்பை, புவியியல் வரைபடங்கள் மற்றும் நோட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவசமாக "லாப்-டாப்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் பிளஸ் 1 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு "லாப்டாப்' வழங்கப்பட்டது. அப்போது, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே "லாப் டாப்' வழங்கப்பட்டது. அப்போது, அரசு அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இருப்பினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வரும் கல்வி ஆண்டிற்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன் 1ம் தேதி அன்றே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் கிடைத்திடும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகம் அனுப்பப்படுகிறது. அதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பாடப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பள்ளிகளில் சுயநிதிப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement