Ad Code

Responsive Advertisement

பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறை: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

பிளஸ் 1 வகுப்பிலும் பொதுத்தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பேராசிரியர் ப.சிவகுமார், பேராசிரியர் கல்விமணி, பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் சென்னையில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

 இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு, பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் மதிப்பெண்ணைக் குவித்துள்ளனர். பிளஸ் 2 வகுப்பில் கணிதப் பாடத்தில் 9,710 பேரும், கணக்குப் பதிவியலில் 5,167 பேரும், வேதியியலில் 1,049 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 853 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களில் மட்டும் 773 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால், மாநிலப் பாடத்திட்ட தேர்வில் மதிப்பெண்ணை அள்ளிக் குவித்த மாணவர்கள், ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

 2014-ஆம் ஆண்டில் இந்தத் தேர்வில் தமிழகம் 14-வது இடத்தையே பிடித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்கள் முதல் 10 இடங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்தத் தேர்வில் ஆந்திர மாணவர்கள் 14.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழக மாணவர்கள் 2.5 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
 இதற்கான முக்கிய காரணம் நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அறிதல் சார்ந்த கேள்விகளுக்கு விடை எழுதும் திறன் பெற்றிருக்கவில்லை என்பதுதான். பல்வேறு அடிப்படைப் பாடங்களில் நமது மாணவர்கள் பலவீனமாக உள்ளனர்.

 பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டையும் நன்றாகப் படித்துப் புரிந்துகொண்டவர்கள் மட்டுமே மேற்படிப்புகளில் ஜொலிக்க முடியும். ஆனால், பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களைச் சொல்லித் தராமல், 2 ஆண்டுகளும் பிளஸ் 2 பாடங்களை மட்டுமே சொல்லித் தருகின்றனர். பிளஸ் 1 வகுப்பு படிக்காமல் பிளஸ் 2 மட்டும் படிக்கும் மாணவர்களால் அடிப்படை விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
 இதற்குச் சிறந்த உதாரணம், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியலில் 124 பேர் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிளஸ் 1 வகுப்புப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அதனால், அந்த வினாக்களுக்கு மாணவர்களால் விடையளிக்க முடியவில்லை.

 பிளஸ் 2 வகுப்புக்கு மட்டுமல்லாது, பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும். அப்போதுதான், அந்தப் பாடங்களும் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். மாணவர்களும் உயர் கல்வியில் சிறந்து விளங்குவர்.
 அதேபோல், இப்போதுள்ள முப்பருவ முறை 10-ஆம் வகுப்புக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அதன்மூலம், தனியார் பள்ளிகள் கல்வியை வணிகமயமாக்குவது தடுக்கப்படும்.

 ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வகுப்புக்குரிய பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றனவா என கல்வித் துறை கண்காணிக்க வேண்டும். அதேபோல், அரசுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் 20 சதவீதம் அறிதல் சார்ந்ததாகவும், 80 சதவீத மதிப்பெண் பாடம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.

 அத்துடன், கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் வகையில் அவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் 
 தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement