Ad Code

Responsive Advertisement

'மொபைல் ஆப்ஸ்'களில் 'போலி'கள் ஏராளம்! 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

போலியான 'மொபைல் ஆப்ஸ்' காரணமாக, 'ஆன்லைன்' மூலம் பரிவர்த்தனை செய்பவர்கள், பணம் இழப்பது அதிகரித்துள்ளது. 'எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பணம் பறிபோய்விடும்' என்று 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கின்றனர்.

சமீபகாலமாக 'ஸ்மார்ட்' போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. பொழுதுபோக்கவும், வங்கி கணக்கு நிர்வகிக்கவும், பண பரிவர்த்தனை செய்யவும், இந்த ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன. 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களும், 'மொபைல் ஆப்ஸ்' மூலம் பொருட்கள் வாங்கவே, வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கின்றன. இத்தகைய காரணங்களால், ஸ்மார்ட் போன்களுக்கான ஏராளமான 'மொபைல் ஆப்ஸ்'கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல, போலியானவை என்றும், நம்முடைய தனிப்பட்ட தகவல்களை கைப்பற்றும் நோக்கம் கொண்டவை என்றும், கவனமுடன் இல்லாவிட்டால், பணம் பறிபோய்விடும் என்றும், 'சைபர்' கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து கோவை மாநகர 'சைபர்' கிரைம் போலீசார் கூறியதாவது: வங்கி கணக்கில் இருப்பு விவரம் சரிபார்க்கும் 'மொபைல் ஆப்ஸ்' இருப்பதாக 'வாட்ஸ் அப்'பில் தகவல் பரவி வருகிறது. இது, ரிசர்வ் வங்கி முத்திரையுடன் அமைக்கப்பட்டுள்ளது. சில வங்கிகளின் இருப்பு சரி பார்க்கும் மொபைல் எண்கள், கால் சென்டர் எண்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ரிசர்வ் வங்கி, இதுபோன்ற 'ஆப்ஸ்' எதையும் உருவாக்கவில்லை. பொதுமக்கள் இந்த 'ஆப்ஸ்'களை பயன்படுத்தினால் விளைவுகள் விபரீதமாகும். உண்மையான 'ஆப்ஸ்'களை போன்றே, பெயரிலும், தோற்றத்திலும் இருக்கும் இந்த போலி 'ஆப்ஸ்'களால் பலர் பணம் இழக்கின்றனர்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும், ௮௦ சதவீத மொபைல் அப்ளிகேஷன்கள், 'சைபர்' தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே, யாராவது போன் மூலம், வங்கி ஏ.டி.எம்., கார்டு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் ரகசிய குறியீட்டு எண்களை விசாரித்தால், எக்காரணம் கொண்டும் சொல்லக்கூடாது.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

தகவல்களை திருடுவது இப்படித்தான்!
'வைரஸ்' தடுப்பு சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்கள், சில 'மொபைல் ஆப்ஸ்' குறித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.தனியார் வங்கிகள், அனைத்து வங்கி சேவையும் கிடைக்கும் வகையில் 'ஆப்ஸ்' உருவாக்குகின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், சில வங்கிகள், தாங்களே 'மொபைல் ஆப்ஸ்' உருவாக்கி வெளியிடுகின்றன. இதனால் பாதிப்புகள் இல்லை.ஆனால், யாரோ ஒருவர் உருவாக்கிய 'மொபைல் ஆப்ஸ்' பயன்படுத்தினால் தகவல்கள் திருடப்பட்டு, பணம் இழக்கும் அபாயம் உள்ளது. சைபர் தாக்குதல், தகவல் திருட்டு, மோசடிகள் அதிகம் நடப்பதால், வங்கிகளும் நேரடி கண்காணிப்பில் அப்ளிகேஷன்களை உருவாக்க வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement