Ad Code

Responsive Advertisement

எல்லாக் குழந்தைகளுக்கும் இலவச கல்விதான் எனது லட்சியம்! - தாயம்மாள்

 கல்விதான் மானுட சமூகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்து வருகிறது. மக்கள் தொகையில் ஆண்களுக்கு நிகராக உள்ள பெண்கள் அனைவருக்கும் சரிவிகித கல்வி கிடைக்கிறதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, பெண் கல்வி என்பது கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பலருக்கு கனவாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும், அந்த நிலையை மாற்ற மத்திய, மாநில அரசின் கல்வித் திட்டங்கள் ஓரளவுக்குப் பலன் அளித்து வருகின்றன.

இதுபோன்ற சூழலில், கல்வியின் வளர்ச்சிக்கு அத்தனையும் அரசுதான் செய்ய வேண்டும் என்று எதிர்பாராமல் களமிறங்கி தன்னலமற்ற கல்விச் சேவை ஆற்றுகிறார் தூத்துக்குடி மாவட்டம், இசவன்குளத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி பெண் பி.தாயம்மாள். பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இவரது சமூகப் பணியைப் பாராட்டி இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) ஃபவுண்டேஷன் "முன்னுதாரண மகளிர்' விருதை வழங்கியுள்ளது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற இதற்கான விழாவில் தாயம்மாளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதக்கம், விருதுச் சான்றிதழ், ரூ.3 லட்சம் விருதுத் தொகை வழங்கி பாராட்டினார். விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்த பி. தாயம்மாள், தான் கடந்து வந்த பாதை குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
""தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இசவன்குளம் என் சொந்த ஊர். பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமம்.

எனது பெற்றோர் பரமசிவன் - தாய் ராமகன்னி விவசாயக் கூலிகள். தந்தை அண்மையில்தான் இடி தாக்கி உயிரிழந்தார். நான்கு சகோதரிகள், மூன்று சகோதரர்கள் கொண்ட குடும்பம் என்னுடையது. தாய் விவசாயக் கூலி.

கல்வி என்பது எனக்கு மட்டுமல்ல, எனது கிராமத்திற்கே சவாலான விஷயமாக இருந்தது. அதற்கு பின்தங்கிய பொருளாதாரநிலைதான் காரணம். குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் அதிகமாகவே இருந்தது. பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப இயலாத சூழ்நிலை. கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லை.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கலைக் கல்லூரியில் பி.காம். பட்டப் படிப்பை முடித்த பிறகு, எனது கிராமக் குழந்தைகளின் கல்விச் சூழ்நிலையை உணர்ந்து 2006-ஆம் ஆண்டில் எனது வீட்டிலேயே மாலை நேர வகுப்புகளை நடத்த ஆரம்பித்தேன்.

பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து வீட்டுக்கு வரவழைத்து மாலை நேர பயிற்சி வகுப்புகளை எடுத்து படிக்க ஆர்வமூட்டினேன். தொடக்கத்தில் பெற்றோர் குழந்தைகளை அனுப்புவதற்குத் தயங்கினர். பிறகு இலவசமாக கற்றுத் தர முன்வந்ததாலும், அவர்களுக்கு கல்வியின் அவசியம், அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை ஆகியவை குறித்து எடுத்துக்கூறியதாலும் பலரும் குழந்தைகளை என்னிடம் படிக்க அனுப்பிவைத்தனர்.

தொடக்கத்தில் 25 குழந்தைகள் வந்தனர். பிறகு இது 45 வரை அதிகரித்தது. ஆண்டுக்கு சராசரியாக 35 குழந்தைகள் வீதம் 2006-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 350 குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுத்துள்ளேன். 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை குழந்தைகளுக்குப் பாடம் நடத்துகிறேன். தேவைக்கேற்ப 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சொல்லித் தருகிறேன்.

குழந்தைகள் ஆர்வமுடன் படிப்பதைப் பார்க்கும் பெற்றோர், மேலும் படிக்க வைக்க விரும்புகின்றனர். அதற்கு அரசின் கல்வி உதவித் தொகையும் உதவுகிறது. ஒவ்வொரு கிராமமும் அங்குள்ள குழந்தைகளும் கல்வி அறிவைப் பெறும்போது நாட்டு முன்னேற்றம் வேகமாக நிகழும் என்று நான் நம்புகிறேன்.

மாலை நேரத்தில் எடுக்கும் வகுப்புகள் போக மற்ற நேரங்களில் தமிழ்நாடு அரசுத் தேர்வுக்கான பயிற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

என்னிடம் படித்த குழந்தைகள் உயர் நிலை, கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர். இதைப் பார்க்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது முயற்சி இசவன்குளம் கிராம பெற்றோரிடம் மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது குழந்தைகளைப் படிக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

6-ம் வகுப்பில் தோல்வியுற்றபோது எனது பெற்றோர் படிப்பை நிறுத்துமாறு கூறினர். அதன்பிறகு, "வயசுக்கு வந்துவிட்ட பிறகு பெண் குழந்தைக்கு இனிமேல் பள்ளிப்படிப்பு எதற்கு' என்றுகூட கூறினர். தொடர்ந்து, வற்புறுத்தியதால்தான் கல்வி கிடைத்தது. இதை உணர்ந்துதான் இதுபோன்ற சேவையில் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்.

இந்நிலையில்தான் "டிவிஎஸ் ஸ்ரீனிவாஸô சேவா டிரஸ்ட்' அமைப்பினர் எங்கள் கிராமத்தில் அரசு உதவியுடன் கிராமத் தத்தெடுப்பு திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தனர். அவர்கள் எனது சமுதாயப் பணிக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் குழந்தைகளைக் கல்வி பெற அளித்து வரும் கல்வித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்துள்ளன. நான் கல்வியைத் தொடர்ந்ததற்கு கூட கல்வி உதவித் தொகைதான் ஒரு காரணம். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சைக்கிள் வழங்கும் திட்டம் கூட உயர் கல்வி மாணவர்களுக்கு } குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.

எனது ஆசையெல்லாம் எங்கள் கிராமம் மட்டுமின்றி, அருகில் உள்ள கிராமக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கான பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒரு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்.
அரசு வேலை கிடைத்தால் அந்த வருமானத்தை எனது முயற்சிக்கு முழுவதும் பயன்படுத்த உள்ளேன். எல்லாக் குழந்தைகளுக்கும் இலவச கல்வி என்பதுதான் எனது லட்சியம்'' என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் தாயம்மாள்.

-வே.சுந்தரேஸ்வரன்
படம்: டி.ராமகிருஷ்ணன்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement