Ad Code

Responsive Advertisement

போலி சாதிச்சான்றிதழ் கொடுத்து அரசு ஆசிரியை வேலை பெற்ற பெண் சான்றிதழை - ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவு

போலி சாதிச்சான்றிதழை கொடுத்து அரசை ஏமாற்றி ஒரு பெண் வேலையில் சேர்ந்துள்ளார். அவரது சான்றிதழை ரத்து செய்து திருவள்ளூர் உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை
அரசு வேலைக்காக பயிற்சி மையம் சென்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்பட பல்வேறு தேர்வுகளை எழுதுகிறார்கள். பள்ளிக்கூட ஆசிரியர் பணியைப் பொருத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதில் சீனியாரிட்டி அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து வந்தது.

சில ஆண்டுகளாக அந்த நிலை மாறி எழுத்து தேர்வு மூலம் மட்டுமே பள்ளிக்கூட ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படும் நிலை உள்ளது.

போலிச்சான்று
இந்த நிலையில் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் 2011–ம் ஆண்டுக்கு உரிய பணியிடங்களை நிரப்ப 2012–ம் ஆண்டு ஜூன் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது. இதில் அனைவரும் தேர்ந்து எடுக்கப்பட்டு ஆசிரியர் பணியில் அமர்த்தப்பட்டனர்.

வேலையில் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தரணி கோட்ட ஸ்ரீவித்யா என்ற பெண் போலி சாதிச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக கூறப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட திருத்தணியைச்சேர்ந்த பெண் பட்டதாரி யசோதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஐகோர்ட்டு உத்தரவு
இதுதொடர்பாக அந்த சான்றிதழை சரிபார்க்க திருவள்ளூர் உதவி கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார். விசாரணையில் தரணி கோட்ட ஸ்ரீவித்யா கொடுத்த சாதிச்சான்று போலி என்று தெரிந்தது. அந்த சான்றிதழை தாலுகா அலுவலகமே வழங்கவில்லை என்றும் தெரிந்தது.

இது குறித்து திருவள்ளூர் உதவி கலெக்டர் ஏ.ஆர்.ராஹூல் நாத் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

போலி சான்று ரத்து
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பாணையின்படி தரணி கோட்ட ஸ்ரீவித்யா என்பவருக்கு வழங்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்று தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதில் மேற்படி நபர் பெற்ற சாதிச்சான்று போலியானது என உத்தரவிடப்படுகிறது.

மேலும் அவர் ஸ்ரீவித்யா என்ற பெயரில் மற்றொரு இன சான்றினை பெற்று வைத்திருந்ததாகவும் அந்த சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெற்று அரசை ஏமாற்றி வேலை பெற்று உள்ளதாகவும் தெரியவருகிறது.

எனவே இந்த சான்றுகள் போலியானது எனவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரியும் மேலும் இவர் பெற்றுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இனச்சான்றுகளை ரத்து செய்தும் உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு உதவி கலெக்டர் ஏ.ஆர்.ராஹூல் நாத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement