Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வருகிற 24-ம் தேதி முதல், தொடர்ந்து மே 6-ம் தேதி வரையில் வரவேற்கப்படுவதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  இம்மாவட்ட பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நேரடி நியமனம் செய்ய பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மொத்தம் 154 பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் தேர்வதற்கான தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியினர்), பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு 35 வயதிற்குள்ளும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லீம்) ஆகியோருக்கு 32 வயதிற்குள்ளும், ஏனையோர் அதாவது மேற்குறிப்பிட்ட பிரிவினரை சாராதவர்களுக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள், ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் மற்றும் விதிமுறைப்படி செயல்படுத்தப்படும். இதில், நிர்ணயம் செய்யப்பட்ட தகுதியை விட உயர் கல்வித் தகுதி பெற்ற அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது.

இதற்கான விண்ணப்பங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி, இம்மாவட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதில், விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவைகளில் ஆண்களும், விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி எஸ்.எச்.என்.வி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பெண்கள் கல்வி, சாதி, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, உயர்கல்வி, பணி முன் அனுபவச்சான்று ஆகியவைகளுடன் அணுக வேண்டும்.

இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.100, சேவைக்கட்டணமாக ரூ.50 ரொக்கமாக அரசு தேர்வு மையங்களில் செலுத்த வேண்டும். மேலும், இப்பணிக்கான எழுத்துத் தேர்வு மே-31ம் தேதி நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement