Ad Code

Responsive Advertisement

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. 

இந்தக் கல்வி முறை 1980ல் மாற்றம் செய்யப்பட்டு பியூசி கல்வி அகற்றப்பட்டது.அதற்குப் பதிலாக எஸ்எஸ்எல்சியை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்தே உயர்கல்வி பயில முடியும். இந்த கல்வித்திட்டம் அறிமுகமான கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் 38 ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது தேர்ச்சி 90 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆயினும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவம், இன்ஜினியரிங்போன்ற உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவர்கள் திறமையற்றவர்களாக விளங்குகின்றனர்.குறிப்பாக பொறியியல் கல்வி பயிலும் பல மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகஅளவில் அரியர்ஸ் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிளஸ் 2வில் நன்றாக பயின்று அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட உயர் கல்வியில் திணறும் நிலைநிலவுகிறது.

இதுகுறித்த ஆய்வில் மாணவர்கள் உயர் கல்வி பயில ஏற்ற அளவில் அவர்களது மேல்நிலைக் கல்வி பாடத்திட்டங்கள் போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. நவீன உயர்கல்வி பாடங்களை சிரமமின்றி கற்பதற்கும் எதிர்கால வேலைவாய்ப்பிற்கு ஏற்ற வகையிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவேண்டிய அவசியம் உணரப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படாமல் இருப்பதும் மாணவர்களின் உயர்கல்வியில் தடுமாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது. இதையடுத்து பேராசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள் கொண்ட உயர்மட்ட குழு முழுமையாக ஆய்வு செய்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பது குறித்த விபரங்களை தயார் செய்தனர்.பின்னர் அதை கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பார்வைக்கும் வழங்கி பல்வேறு திருத்தங்களுக்குப் பின்னர் இறுதி வடிவம் கொடுத்து கடந்த ஆண்டே கல்வித்துறைக்கு சமர்ப்பித்தனர். 

இதை இறுதி ஆய்வு செய்த கல்வித்துறை அரசின் அனுமதி பெற்று பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. அனேகமாக வரும் 2016-17ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 கல்விக்கும், அதற்கு அடுத்த கல்வியாண்டான 201718ல் பிளஸ் 2 கல்விக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதை முறைப்படி அரசு அறிவிக்கும் என ஆசிரியர்கள் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அரசு அறிவித்ததும் புதிய பாடத்திட்டங்களுடன் கூடிய பாடப்புத்தகங்களை அச்சடிக்கும் பணி நடப்பு கல்வி ஆண்டிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement