Ad Code

Responsive Advertisement

whats app விவகாரம் - ஆள்மாறாட்டம் - வாட்ஸ்அப் பில் கேள்வித்தாள் அனுப்பிய விவகாரத்தில் ....-அரசு பள்ளி ஆசிரியர்கள்,கல்வி அதிகாரிகள் சிக்குகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு கணித வினாத்தாளை, 'வாட்ஸ் அப்'பில் அனுப்பிய விவகாரத்தில், ஆள்மாறாட்ட முறைகேடும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர், தலைமைக் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் என, மேலும், ஐந்து பேர் சிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த, 18ம் தேதி, பிளஸ் 2 கணிதத் தேர்வு நடந்தது. அப்போது, ஓசூர், பரிமளம் மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்பாளராக இருந்த, தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் என்பவர், தேர்வுக்கு வராத மாணவர் ஒருவரின் வினாத்தாளை, மொபைலில் படம் எடுத்தார்.



நான்கு பேர் கைது:
பின், 'வாட்ஸ் அப்' எனப்படும், தகவல்களை அனுப்பும் மொபைல் போன் அப்ளிகேஷன் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது. இந்த முறைகேடு தொடர்பாக, விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் என, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவுப்படி, தேர்வுப் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, பெயர்ப் பட்டியல் சரிபார்க்கப்பட்டது.

பட்டியலில் இல்லை:
இதில், சர்ச்சைக்குரிய, பரிமளம் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வுப் பணியாற்றிய, விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர், தேர்வுத்துறையின் தேர்வுப்பணி பட்டியலில் இல்லாதது தெரியவந்துள்ளது. இதன் மூலம், தேர்வுப் பணிகளில் நடந்த, அடுத்த கட்ட முறைகேடு அம்பலமாகி உள்ளது.

இது தொடர்பாக, தேர்வுத்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ், கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அதிகாரி ராமசாமியிடம் அளித்ததேர்வுப்பணி பட்டியலில், விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன் மற்றும் கோவிந்தன் ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை. 

கண்டிப்பான உத்தரவு:
ஆனால், கணிதத் தேர்வின் போது, எவ்வித அதிகாரப்பூர்வ உத்தரவு நகலும் இல்லாமல், இருவரும் கண்காணிப்பாளர் பணிக்கு வந்துள்ளனர். 'அடையாள அட்டை இல்லாமல் தேர்வுப் பணியில் ஈடுபடக் கூடாது' என்ற கண்டிப்பான உத்தரவு இருந்தும், அவர்கள் இருவரும், தேர்வுப் பணியில் இருந்துள்ளனர்.உண்மையில், கோவிந்தன் மற்றும் மகேந்திரன் பணியிடத்தில், வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தேர்வுத் துறையால் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் யார்... அவர்கள் ஏன் பணிக்கு வரவில்லை... அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதா... இல்லை வேண்டுமென்றே அவர்கள் வரவில்லையா... அவர்கள் வேறு மையத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றால், அதற்கான உத்தரவு பிறப்பித்தது யார்? என, விசாரணை நடந்து வருகிறது.இந்த விவகாரத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவர் மட்டுமின்றி, மாவட்டக் கல்வி அலுவலர், தேர்வு மையத் துறைப் பொறுப்பாளர், தேர்வு மையக் கண்காணிப்பாளர் (தலைமை ஆசிரியர்) 
ஆகியோரும் சிக்கியுள்ளனர்.அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. அதிகாரப்பூர்வ உத்தரவு இல்லாமல், தனியார் பள்ளி ஆசிரியர்களை பணியில் அமர்த்தியது ஏன் என்றும் விசாரிக்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட மாவட்டத்தில், சில தேர்வு மையங்களில், ஆசிரியர்கள் சிலர் தேர்வுப் பணிக்கு வராமல், புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்தும், விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீதான தவறுகள் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தால், அவர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நடவடிக்கை பாய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement