Ad Code

Responsive Advertisement

வரும் கல்வியாண்டில் B.Sc கண் பரிசோதகர் படிப்பு தொடங்க நடவடிக்கை

சென்னை எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் (2015-16) பி.எஸ்ஸி. கண் பரிசோதகர் படிப்பு தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார்.

அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில், உலக கண் பரிசோதகர் விழிப்புணர்வு தின விழா (மார்ச் 23), முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா ஆகியவை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பேசியதாவது: கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பங்கள், சிகிச்சை முறைகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. அதேநேரத்தில், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு சிகிச்சையளிக்கும் வகையில் கண் பரிசோதகர் படிப்புகளையும், பாடத் திட்டங்களையும் மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

தற்போது எழும்பூரில் செயல்பட்டு வரும் அரசு கண் பரிசோதகர் பட்டயக் கல்லூரியில் 2 ஆண்டு கால கண் பரிசோதகர் பாடப் பிரிவில் ஆண்டுக்கு 30 பேர் படித்து வருகின்றனர். அதை மேம்படுத்தி, புதிதாக பி.எஸ்ஸி. கண் பரிசோதகர் படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டில் இந்தப் படிப்பைத் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் அனுமதி கிடைத்தவுடன், தேவையான பாடத் திட்டம் உருவாக்கப்படும். பி.எஸ்ஸி. படிப்பில், 10 முதல் 20 இடங்கள் வரை அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

இந்த விழாவில் அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் நமீதா புவனேஸ்வரி, நிலைய மருத்துவ அதிகாரி கற்பகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement