Ad Code

Responsive Advertisement

முதுகலை ஆசிரியர் கவுன்சிலிங் பாதிப்பு

முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன கவுன்சிலிங் இணையதள, 'சர்வர்' கோளாறால் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், தேர்வு நடத்தப்பட்டு, 1,789 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, இணையதள கவுன்சிலிங், நேற்று, தமிழகம் முழுவதும் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம், சென்னையில் உள்ள பள்ளி கல்வி துறை அலுவலகத்தில் இருந்து, இணையதள இணைப்பின் மூலம், பணியிடங்கள் நிரப்பப்பட்டன. நேற்று காலை, 10:00 மணிக்கு, கவுன்சிலிங் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை, பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை இணைக்கும், இணையதள, 'சர்வரில்' கோளாறு ஏற்பட்டதால், குறித்த நேரத்தில், கவுன்சிலிங் துவங்கவில்லை. இதனால், பல மாவட்டங்களில் இருந்து, ஆசிரியர் பணி நியமனத்திற்கு வந்திருந்த முதுகலை பட்டதாரிகள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்று சந்தேகம் அடைந்தனர். பின் மதியம், 1:00 மணிக்கு, 'சர்வர்' சரி செய்யப்பட்டு, கவுன்சிலிங் துவங்கியது. இதில், முக்கிய மாவட்டங்களில் உள்ள ஆசிரியர், காலி பணியிடங்கள் காட்டப்படவில்லை என, சிலர் அதிருப்தி அடைந்தனர். ஆசிரியர்கள், பணிக்கு செல்ல அச்சப்படும், சில பள்ளிகள்; பின்தங்கிய மாவட்டங்களாக கருதப்படும் வேலூர், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் உள்ள காலி இடங்களை மட்டும், புதிய பணி நியமனத்திற்கு காட்டியதாக கூறப்படுகிறது. சென்னையில், 100 அரசு பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. ஆனால், ஏராளமான பணியிடங்கள், நேற்று நிரப்பப்படவில்லை. ஏற்கனவே, பணியாற்றும் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், வரும் மே மாதம் நடக்க உள்ளதால், அப்போது, சென்னை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் உள்ள, காலி இடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கில் தேர்வானவர்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களை, தேர்வு செய்து கொள்ள, உயர் அதிகாரிகளின் சிபாரிசை நாடியுள்ளனர். குறிப்பாக, கோட்டையில் உள்ள ஒரு சிலரின், சிபாரிசின் படியே, புதிய ஆசிரியர்களுக்கு விருப்பப்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இணையதள கவுன்சிலிங் முறையில், எந்த முறைகேடும், சிபாரிசும் இல்லாமல், பள்ளி கல்வி விதிகளின்படியே நியமனங்கள் நடந்துள்ளன' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement