Ad Code

Responsive Advertisement

டிஜிட்டல் முறைக்கு மாறும் பழங்கால அரிய தமிழ் நூல்கள்

டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக குருவராஜபேட்டை மாணிக்கவாசகர் மடாலயத்தில் இருந்த 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 20 அரிய தமிழ் நூல்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தினர் வியாழக்கிழமை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

18, 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய நூல்களை சிதிலமாகாமல் தடுக்கும் பொருட்டு, அவை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதன்படி, தமிழ்நாட்டில் அவை எங்கெங்கெல்லாம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவோ அங்கிருந்து அவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் மாணிக்கவாசகர் மடாலயம் உள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்தின் பராமரிப்பில் உள்ள இந்த மடாலயத்தில் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை மூலம் தமிழ் பண்பாட்டு ஆராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ் ஆராய்ச்சி மைய இயக்குநர் விஜயராகவன் குருவராஜபேட்டையில் உள்ள மாணிக்க வாசகர் மடாலாயத்துக்கு வியாழக்கிழமை நேரில் வந்தார்.

இங்குள்ள பழங்காலப் புத்தகங்களை பார்வையிட்ட இயக்குநர் விஜயராகவன், தமிழக அரசின் சுவடிகள் பாதுகாப்பு மையப் பொறுப்பாளரும், பேராசிரியருமான அ.சதீஷ் ஆகியோர் டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக சிதிலமடைந்த நிலையில் இருந்த 20 புத்தகங்களைத் தேர்வு செய்தனர்.

இதில் உ.வே.சாமிநாத அய்யரின் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பதிப்பித்த திருவானைக்கா புராணம், ஆறுமுக நாவலர் பதிப்பித்த கந்தபுராணம் ஸ்ரீவை தாமோதரப் பிள்ளை பதிப்பித்த சூலாமணி, தஞ்சை வளவன் கோவை, கல்லாடம் உள்ளிட்ட 19-ஆம் நூற்றாண்டு நூல்கள் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும், குருவராஜபேட்டையில் உள்ள மங்கலங்கிழார் நூல் நிலையத்தில் இருந்து மாணிக்கவாசகர் மடாலயத்துக்கு அளிக்கப்பட்ட 1930-இல் வெளிவந்த கலாநிலையம் இதழ்கள் 20க்கும் மேற்பட்டவையும் டிஜிட்டல் முறை மாற்றத்துக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன. மடாலயப் பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் இந்தப் புத்தகங்களை உலகத் தமிழ் ஆராய்ச்சி மைய இயக்குநர் விஜயராகவனிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து சுவடிகள் பாதுகாப்பு மையப் பொறுப்பாளர் அ.சதீஷ் தெரிவிக்கையில், "இந்த அரிய நூல்களை இதுவரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தது பெரிய விஷயம்.

இந்த அரிய நூல்கள் பதிப்பித்த முறை மாறாமல் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள இவற்றை டிஜிட்டல் முறையில் மாற்றுவது அவசியம்' என்றார் அ.சதீஷ்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement