Ad Code

Responsive Advertisement

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்

முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு, ஏழை மாணவ, மாணவியருக்கு உதவும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் சத்துணவு, இலவச கல்வி, சீருடை, நோட்டு மற்றும் புத்தகம், காலணி, உபகரணங்கள், சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்குகின்றன. கிராமப்புறங்களில் இருந்து நகர் பகுதிக்கு வருவோர், நகரின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திலுள்ள பள்ளிக்கு மாணவ, மாணவியர், அரசு டவுன் பஸ்களில் வந்து செல்ல, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படும், 32 கி.மீ., தூரம் வரை, மாணவர்கள் வந்து செல்ல, ஆண்டு தோறும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு வரை, முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறந்த பின், மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வழங்கி, பூர்த்தி செய்து வாங்கி, போக்குவரத்து கழகங்களிடம் ஒப்படைத்து, ஜூலை மாத இறுதிக்குள், மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடம் பள்ளி ஆசிரியர்கள், 2015 - 16ம் ஆண்டிற்கான இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வழக்கமாக கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும்போது, கடந்த ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் இல்லாத போதிலும், பள்ளியின் சீருடையில் வரும் மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லுமாறு போக்குவரத்து கழகத்திற்கு அறிவுறுத்தப்படும். அடுத்த இரு மாதங்களில், அவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும். ஆனால், பள்ளி கல்வித் துறை உத்தரவையடுத்து, வரும் ஆண்டுக்கு, பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களை தவிர்த்து, இதர வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் பஸ் பாசுக்கான விண்ணப்பம், இப்போதே வழங்கி பூர்த்தி செய்து பெறப்படும். 2015 - 16ம் ஆண்டுக்கான இலவச பஸ் பாஸ் தயார் செய்து, பள்ளி திறக்கும் முதல் நாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும். பள்ளி மாறிச்சென்றவர்கள், புதிதாக பள்ளிக்கு வந்தவர்கள் விவரங்களை வழங்கி, பாஸ்களை ரத்து செய்யவும், பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement