Ad Code

Responsive Advertisement

கல்வித் துறை நடவடிக்கை: சீர்காழி அருகே 6 மாணவர்களும் தமிழ் 2-ஆம் தாள் தேர்வு எழுதினர்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகள் கல்வித் துறையின் நடவடிக்கையால் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை எழுதினர்.
சீர்காழியை அடுத்த கீழபெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்த 42 மாணவ, மாணவிகளில், சாந்தி, கனிதா, காயத்திரி, ரேணுகா, தமிழ்ச்செல்வி, சுபாஷ் ஆகிய 6 பேருக்கு உரிய வருகைப் பதிவு இல்லாததால், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வரவில்லை எனக் கூறி தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.


ஆனால், 100 சதவீத தேர்ச்சி காட்ட சுமாராகப் படிக்கும் இந்த 6 மாணவ, மாணவிகளை வருகைப் பதிவை காரணம் காட்டி தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு பள்ளித் தலைமை ஆசிரியை பட்டுஷீலா அற்புதராணி, வகுப்பு ஆசிரியர் ஆனந்த், செய்முறை ஆசிரியர் பரமானந்தன் ஆகியோர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட கல்வித் துறை நடவடிக்கையால் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு மீண்டும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த 6 பேரும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வை ஆர்வமாக எழுதினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement