Ad Code

Responsive Advertisement

10 வகுப்பு தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமையாசிரியர்: 14 மாணவர்களுக்கு பாதிப்பு

தூத்துக்குடி அருகேயுள்ள நாசரேத் பகுதி பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் தடுத்ததால், தேர்வு எழுத முடியவில்லை என , மாணவர், அவரது பெற்றோர், உறவினர்களுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.இதே போல 14 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாணவனின் தந்தை அழகு கலெக்டரிடம் அளித்த புகார்: நாசரேத் பகுதியில் மர்காஷியஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் என் மகன் முத்துராமன் பத்தாம் வகுப்பு படித்தான். தேர்வு கட்டணம் செலுத்திவிட்டான், அவனுக்கான ஹால்டிக்கெட் வந்துவிட்டது. ஆனால் பள்ளியின் தலைமையாசிரியர் ஜோசப் ஜெயராஜ் என் மகனிடம், '' நீ பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையமாட்டாய், எனவே நீ பள்ளிக்கு வரவேண்டாம். தேர்வு எழுதவும் கூடாது'', என மிரட்டியுள்ளார்,' இதனால் மன உளைச்சல் அடைந்த எனது மகன் சென்னைக்கு ஓடி விட்டான். தேர்வு எழுதும் நேரத்தில் ஹால்டிக்கெட் கேட்டதற்கு தலைமையாசிரியர் கொடுக்க மறுத்துவிட்டார். இதே போல் 14 மாணவர்களை தலைமையாசிரியர் தேர்வு எழுத விடாமல் பள்ளிக்கும் வர விடாமல் தடுத்துவிட்டார். 100 சதவீத தேர்ச்சி, என்ற காரணத்திற்காக மாணவர்களை தேர்வு எழுத விடாமல் தடுத்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட மாணவன் முத்துராமன் தெரிவித்ததாவது: பள்ளிக்கு ஒழுங்காக சென்று கொண்டிருந்தேன். நீ தேர்வில் தேர்ச்சியடைய மாட்டாய், நீ பள்ளிக்கு வர வேண்டாம், என தலைமையாசிரியர் தெரிவித்தார். அதன் காரணமாக நான் சென்னைக்கு சென்றுவிட்டேன். தேர்வு எழுதும் நேரத்தில் ஹால்டிக்கெட் கேட்ட போது தலைமையாசிரியர் தர மறுத்துவிட்டார். நான் தமிழ் முதல், இரண்டாம் தாள், ஆங்கிலம் ஆகிய தேர்வுகளை எழுத முடியவில்லை. என்னைப்போல் 14 மாணவர்களை, தலைமையாசிரியர் தேர்வு எழுத முடியாமல் தடுத்துவிட்டார். கலெக்டரிடம் புகார் செய்த பின்பு ஏழு பேர் மட்டும் ஆங்கில தேர்வு முதல் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் தேர்வுகளை எழுத என்னைஅனுமதிக்க வேண்டும், என்றார்.

முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்ததாவது: மர்காஷியஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 14 பேர் நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்துள்ளனர். இவர்கள் செய்முறை தேர்வு எழுதவில்லை. இந்நிலையில் 'மருத்துவசான்று வழங்கினால் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்,' என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் யாரும் வரவில்லை. தற்போது ஏழு மாணவர்கள் ஆங்கில தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

பள்ளி நிர்வாகங்கள் 100 சதவீத தேர்ச்சிக்காக சரியாக படிக்காதமாணவர்களைதேர்வு எழுதவிடாமல் தடுத்து விடுகின்றனர். பெற்றோர்களிடம், எனது மகன் தேர்வு எழுத முடியவில்லை, என எழுதி வாங்கி கொள்கின்றனர். இது போல் சம்பவம் பல பள்ளிகளில் நடந்து வருகிறது. தங்கள் மாவட்டம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வர வேண்டும், என்ற ஆர்வத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும், இதற்கு உடந்தையாக இருக்கின்றனர். படிக்காத மாணவர்களை படிக்க வைக்கவே பள்ளிகள்.ஆனால் 100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை தேர்வு எழுத விடாமல், தலைமையாசிரியரே தடுப்பது எந்த விதத்தில் நியாயம்.. கல்வித்துறை இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement