Ad Code

Responsive Advertisement

டெங்கு பாதிப்பு குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில்... : உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், டெங்கு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு, பலரும் பலியாகி வருகின்றனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, மாநில சுகாதாரத் துறை, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சால் பாதிப்புடன் வரும் அனைவருக்கும், டெங்கு குறித்த பரிசோதனை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 'சாதாரண காய்ச்சல் என்றாலும், நேரடியாக மருந்து கடைகளில், மருந்து வாங்கி சாப்பிடாதீர்கள்' என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், டெங்கு காய்ச்சல் இல்லாத பகுதிகளிலும், தொடர்ந்து சுகாதார பணிகளை மேற்கொள்ளுமாறு உள்ளாட்சிகளுக்கு, சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், டெங்கு காய்ச்சல் பற்றிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
மூடப்படாத குடிநீர் தொட்டி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 165 உயர்நிலைப் பள்ளிகளும், 167 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில், 13 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் ஆய்வு செய்ய, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் செய்ய வேண்டிய ஆய்வு:
பள்ளி வளாகத்தில், எந்த பகுதியிலாவது தண்ணீர் தேங்கியுள்ளதா?
பள்ளிகளில் சுற்றுப்புறம் எந்த அளவிற்கு துாய்மையாக உள்ளது?
பள்ளி வளாகத்தில் மூடப்படாத குடிநீர் தொட்டி மற்றும் கழிவுநீர் தொட்டி ஏதேனும் உள்ளதா?
வீடு மற்றும் பள்ளிகளில் சுகாதாரமாக வைத்திருப்பது குறித்து, மாணவ, மாணவியருக்கு இறைவணக்க கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
தொடர் காய்ச்சல் ஏற்பட்ட மாணவ, மாணவியர், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பள்ளி நிர்வாகம் அனுப்பியதா?
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பப்பட்ட விவரம்?
தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், டெங்கு குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தி, மாவட்ட முதன்மை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.
மறைமலைநகரில் ஒரு வாரத்திற்கு முன், டெங்கு காய்ச்சலால், ஒரு பெண் பலியாகியுள்ளார். இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், சுகாதாரத் துறையும், உள்ளாட்சித் துறையும் டெங்கு குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகளிலும் நடத்தப்படும் இந்த ஆய்வு, மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பை குறைக்கும் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement