Ad Code

Responsive Advertisement

எது நல்ல கல்லூரி? எப்படிக் கண்டுபிடிப்பது?

பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற பிறகு, அடுத்து எந்தக் கல்லூரியில் சேருவது என்பதுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் நிற்கும் முக்கியக் கேள்வி. ஒரு கல்வி நிறுவனத்தில் சேருவதற்கு முன், அந்தக் கல்லூரியில் என்னென்ன அம்சங்களைப் பார்க்க வேண்டும், படிப்புகளைத் தேர்வு செய்வதில் எத்தகைய நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்பது குறித்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் வழிகாட்டுகிறார்...
யர்கல்வி படிப்பு என்பது மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம். எனினும், பெற்றோர்கள் தங்கள் விருப்பத்தைப் பிள்ளைகளின் மீது திணிக்காமல், பிள்ளைகளுக்கு எந்தத் துறையில் உண்மையான ஆர்வம் இருக்கிறதோ, அந்தத் துறைக்குத் தேவையான பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்து படிக்கச் சொல்வது நல்லது. பிள்ளைகளுக்கு பயாலஜியில் ஆர்வம் இருக்காது; அவர்களை எம்.பி.பி.எஸ்., படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்கள். இல்லாவிட்டால், 'பயோ டெக்னாலஜி எடுத்துக்கோ' என்பார்கள். கணிதம், இயற்பியலில் சற்றும் ஆர்வம் இல்லாதவர்களை கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கச் சொன்னால் எப்படி? விருப்பமில்லாத பாடங்களை எடுக்கும்போது, மாணவர்களுக்கு அந்தப் படிப்பில் விரக்தியும் வெறுப்பும்தான் ஏற்படும். எனவே, எந்தெந்தப் பாடங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வமும் திறமையும் இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.
 
கம்ப்யூட்டர் துறைதான் என்றில்லை... அறிவியல், பொருளியல், சமூகவியல் போன்ற வேறு எந்தத் துறையை எடுத்துப் படித்தாலும், திறமையான மாணவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. கம்ப்யூட்டர், ஐ.டி. உள்ளிட்ட பொறியியல் படிப்புகளைப் படித்தவர்களுக்கு உடனே கை நிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைத்துவிடுகிறது என்று பலர் நினைத்து, அந்தப் படிப்பில் சேருகிறார்கள். உண்மையில், பொறியியல் படிப்புகளைப் படித்து முடித்து வெளியேறும் மாணவர்களில் 10 சதவிகித மாணவர்களுக்கு மட்டுமே அவர்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்கிறது. மற்றவர்களுக்குக் கிடைப்பது சாதாரண வேலைதான். எனவே, எந்தத் துறையாக இருந்தாலும், அதில் நம் திறமையையும் தகுதியையும் வளர்த்துக்கொள்வது அவசியம்.
சிறந்த கல்வி நிலையங்களில் சேர்ந்து படிக்கும்போது, அது தரமான கல்விக்கு மட்டுமின்றி, நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான முதல் படியாகவும் அமைந்துவிடுகிறது.
ஒரு கல்லூரியில் சேருவதற்கு முன்பு, அந்தக் கல்லூரி சிறந்த கல்லூரியா என்பதை எப்படி எடை போடுவது? பல கல்வி நிறுவனங்கள் பத்திரிகைகளில் கொடுக்கின்ற விளம்பரத்தைப் பார்த்து மயங்கிவிடக் கூடாது. பிரமாண்டமான கட்டடங்கள் இருப்பது போல கல்லூரி விவரக் குறிப்பில் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் கல்லூரிக்கு அது போலப் பெரிய கட்டடங்கள் இருக்கவும் கூடும். ஆனால், பெரிய கட்டடங்கள் இருப்பதால் மட்டுமே அந்தக் கல்லூரிக்குத் தனிச் சிறப்பு வந்துவிடாது. அக்கல்லூரியின் ஆய்வகங்கள் எந்த அளவில் இருக்கின்றன, நூலகங்களில் எந்த அளவுக்குத் தரமான புத்தகங்களும் ஆய்விதழ்களும் வாங்கப்படுகின்றன என்பதைஎல்லாம் பார்க்க வேண்டும். இன்று ஒவ்வொரு பொறியியல் கல்லூரியும் ஒரு வெப்சைட் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
நாம் சேர இருக்கும் பொறியியல் கல்லூரி அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றதா, எந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்றது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அத்துடன், அங்குள்ள படிப்புகள் தர அங்கீகாரம் பெற்றவையா என்பதையும் பார்க்க வேண்டும். எந்தக் கல்வி நிலையத்துக்கும் முதுகெலும்பு போன்றவர்கள் ஆசிரியர்கள். எனவே, நாம் சேரும் துறையில் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். சில கல்லூரிகளில் குறிப்பிட்ட சில துறைகளில் மட்டும் ஓரிரு பேராசிரியர்கள் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் விரிவுரையாளர்களாக இருப்பார்கள். விதிமுறைகளின்படி, பல்வேறு படிநிலைகளில் எந்த அளவுக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள், பி.ஹெச்டி., பட்டம் பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் என்பதைஎல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நாம் சேரும் பொறியியல் கல்லூரி எத்தனை ஆண்டுகளாக நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதும், அங்கு முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்வது முக்கியம். முதுநிலைப் படிப்புகள் உள்ள கல்லூரியில் ஓரளவுக்குக் குறைந்தபட்ச வசதிகள் இருக்கும் என நம்பலாம். சில கல்லூரிகளில், பல்கலைக்கழகப் பாடத் திட்டத்துக்கு மேலாகவே தற்போதைய தேவைக்கேற்ப சிறப்புப் பாடங்களைக் கற்றுத் தருவார்கள். மாணவர்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதற்காகக் கல்லூரி நேரம் தவிர, மற்ற நேரங்களில் ஆங்கில மொழி அறிவு பயிற்சி, பர்சனாலிட்டி டெவலப்மென்ட் போன்ற ஆளுமையை வளர்க்கும் பயிற்சிகளையும் அளிப்பார்கள். வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுத் தரும் கல்வி நிறுவ னங்களும் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளியிட்டு வந்தார்கள். இதன் மூலம் ஒவ்வொரு கல்லூரியின் தரத்தைப் பெற்றோர்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. இப்போது அதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. எனினும், எந்தெந்தக் கல்லூரிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்யப் பெரிய பெரிய நிறுவனங்கள் வருகின்றன என்பதை அக்கல்லூரியின் தரத்துக்கு ஓர் அடையாளமாகக் கருதலாம்.
கல்லூரிகளில் உள்ள கட்டண விவரங்களைத் தெரிந்துகொண்டு, அதற்கு நம்மிடம் வசதி இருக்கிறதா என்பதையும் முடிவு செய்துகொள்ள வேண்டும். ஏராளமான பணத்தைத் தகுதிக்கு மீறிக் கடன் உடன் வாங்கிக் கொட்டிக் கொடுத்து, தரமில்லாத பொறியியல் கல்லூரிகளில் சேருவதைவிட, நல்ல தரமான கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதே நல்லது. அப்படிப் படித்துச் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஒருநாளும் சோடை போகமாட்டார்கள்.
தரமான கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துவிட்டாலே, ஓட்டப்பந்தயத்தில் பாதி தூரம் கடந்த மாதிரி! எனவே, எந்தப் படிப்பை எடுத்துப் படித்தாலும், நல்ல கல்வி நிலையத்தில் படியுங்கள்! எந்தப் படிப்பானாலும், அதில் சோபிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது மடி மேல் கனி!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement