Ad Code

Responsive Advertisement

"விரைவில் அரபு மொழியில் திருக்குறள்'

 திருக்குறளை அரபு மொழியில்   வெளியிட நடவடிக்கை  எடுத்து வருவதாக செம்மொழித்  தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் தெரிவித்தார்.


ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையமும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்தும் செவ்விலக்கியக் கலைவடிவங்களும், மாற்றுக் கலை வடிவங்களும் என்பது குறித்த  10 நாள் பயிலரங்கம் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

 தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வர் அ.ஜோசப்துரை தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் ஆ. நாகராசன், பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் சா. அமுதன், உதவிப் பேராசிரியர் துரைப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்குடி அழகப்பா பல்கலையின் பதிவாளர் வெ. மாணிக்கவாசகம் பயிலரங்கை தொடக்கி வைத்தார்.

 விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் எம். முத்துவேல் பேசியது:  21-ஆம் நூற்றாண்டில் மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குகூட விடை தரக்கூடிய வகையில் திருக்குறள் அமைந்துள்ளது. திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் தனித்தனி ராகத்தில் இணையத்தில் பாடலாக கேட்கலாம். 1812இல் திருக்குறள் அச்சேறுவதற்கு முன்பாகவே 1730இல் குறள் ஐரோப்பிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஓலைச்சுவடியிலிருக்கும்போதே வேறு மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது திருக்குறள் ஒன்றாகத்தான் இருக்கும்.

 தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, குஜராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. விரைவில் அரபு மொழியில் திருக்குறளை வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதுவரை 80க்கும் மேற்பட்டோர் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழி பெயர்த்திருக்கின்றனர்.

இவற்றில் சிறந்த 18 மொழி பெயர்ப்புகளை தேர்வு செய்து தொகுத்து அதை நூலாக்கியிருக்கிறோம்.

   கல்லூரிகளில் செம்மொழித் தமிழில் முதுகலை படிப்பு தொடங்கினால் ஒரு மாணவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குகிறோம். புத்தகங்கள் வாங்க ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி செய்கிறோம். முனைவர் பட்டம் பெற ஒரு மாணவருக்கு மாதம் ரூ.12 ஆயிரமும், முனைவர் பட்ட மேலாய்வுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் வீதம் 5 பேருக்கும் நிதியுதவி செய்யப்படுகிறது என்றார் முத்துவேல்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement