Ad Code

Responsive Advertisement

மானியத் திட்டத்தில் சேராதோருக்கு எரிவாயு உருளை நிறுத்தமா? எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம்

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மானியத் திட்டத்தில் இணைவதற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் இருப்பதாகவும், யாருக்கும் எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தப்படவில்லை எனவும், அப்படி ஏதேனும் புகார்கள் இருந்தால் அதைத் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் சமயைல் எரிவாயு நேரடி மானியத் திட்டம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேரடி மானியத் திட்டத்தில் இணையாத நுகர்வோருக்கு எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என சமையல் எரிவாயு முகவர்கள் எச்சரிக்கை விடுப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை 1.53 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. இவற்றில் வெள்ளிக்கிழமை (பிப்.27) நிலவரப்படி சுமார் 1.20 கோடி வாடிக்கையாளர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். சுமார் 20 சதவீதம் பேர் இந்தத் திட்டத்தில் இணையாமல் உள்ளனர். எனவே, அவர்களையும் இணைக்க தற்போது எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

ஒரு மாதம் அவகாசம்: சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிகையாளர்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் மானியத் திட்டத்தில் இணைபவர்களுக்கு முன்வைப்புத் தொகை ரூ.568-ம், அந்தந்த மாதத்துக்கான மானியத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

விநியோகம் நிறுத்தி வைப்பா? மானியம் பெற விரும்பாத நுகர்வோர்களுக்கு தொடர்ந்து சந்தை விலையில் எரிவாயு உருளைகள் கிடைக்கும். இந்த நிலையில், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு சமையல் எரிவாயு உருளை விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என முகவர்கள் தெரிவிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், அதுதொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனவும், அதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாருக்கு விநியோகம் நிறுத்தப்படும்? போலி பெயரில் உள்ள எரிவாயு இணைப்புகளைக் கண்டறிய "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் (கே.ஒய்.சி) வசதி' அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான படிவத்தில் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பெறப்பட்டன. இந்தப் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள், தனிமைப்படுத்தப்பட்டு, ஒரே நபர் பல இணைப்புகளைப் பெற்றிருந்தது கண்டறியப்பட்டது.

பின்னர், இந்த இணைப்புகளுக்கு எரிவாயு மானியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement