Ad Code

Responsive Advertisement

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி கட்டணம்: நீதிபதி குழு முடிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு

பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதி குழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் நிர்வாக சங்கத்தின் தலைவர் செல்வமணி, தாக்கல் செய்த மனு: சுயநிதி பாலிடெக்னிக் வகுப்புகளுக்கான கல்வி கட்டணத்தை, தமிழக அரசு, 2002ல் நிர்ணயித்தது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டுக்கு, 6,500 ரூபாய், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 21,700 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. கட்டணத்தை உயர்த்தும்படி, கோரிக்கை விடுக்கப்பட்டது; 2003ல், புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய், கட்டணம் நிர்ணயிக்க பரிசீலிக்கும்படி, கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு, அரசு அறிவுறுத்தியது. ஒற்றைச்சாளர முறையில் வரும் மாணவர்களுக்கு, கட்டணத்தில், 5,000 ரூபாய் சலுகை வழங்கவும், அறிவுறுத்தப்பட்டது. புதிய கட்டண விகிதத்தின்படி, நாங்கள் வசூலித்து வருகிறோம். கடந்த, 2012ல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், 'ஆதிதிராவிட மாணவர்களிடம் இருந்து, கட்டணம் வசூலிக்க கூடாது. அந்த கட்டணத்தை, அரசே தரும்' என, கூறியது. புதிய உத்தரவின்படி, கட்டணத்தை தராமல், பழைய கட்டணத்தை அரசு தந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும், 30 ஆயிரம் ரூபாய், கட்டணமாக தர, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, ''பாலிடெக்னிக் வகுப்புகளுக்கு, கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை, அரசு வழங்கும்,'' என்றார். மனுவை விசாரித்த, நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: அரசு நியமித்துள்ள குழுவை, மனுதாரர் சங்கம் அணுக வேண்டும். நீதிமன்ற உத்தரவின் நகலை இணைத்து, நீதிபதி குழுவிடம், மனு அளிக்க வேண்டும். மனு, அளிக்கும்பட்சத்தில், அதை, கட்டண நிர்ணய குழு பரிசீலிக்கும். மனுதாரர் சங்கத்தையும், ஆதிதிராவிடர் நலத் துறை தரப்பையும் கேட்ட பின், தகுதி அடிப்படையில், உத்தரவு பிறப்பிக்கும். இவ்வாறு, நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement