Ad Code

Responsive Advertisement

ஐ.எப்.எஸ்., தேர்வில் சேலம் மாணவி முதலிடம்

ஐ.எப்.எஸ்., எனும் இந்திய வனப்பணி தேர்வில், சேலம் மாணவி பிரீத்தா, அகில இந்திய அளவில் எட்டாமிடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், இந்திய வனப்பணியான, ஐ.எப்.எஸ்., முதல்நிலைத் தேர்வு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நடந்தது. நவம்பர் மாதம் முதன்மை தேர்வும், கடந்த பிப்ரவரி மாதம், நேர்காணலும் நடந்தன.
இறுதி தேர்வு முடிவு, கடந்த, 18ம் தேதி வெளியானது. இதில், அகில இந்திய அளவில், 85 பேரும், தமிழக அளவில், 15 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றில், சேலத்தைச் சேர்ந்த பிரீத்தா என்ற மாணவி, இந்திய அளவில் எட்டாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம், அழகாபுரம், பி.என்.டி., காலனியைச் சேர்ந்த பிரீத்தாவின் தந்தை முருகேசன், ஊட்டியில் ஆவின் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். தாய் நர்மதா, சேலம் மாவட்டம், ஓமலூர் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். பிரீத்தாவின் சகோதரர் ரேவந்த், கோவையில், தனியார் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.

வனப்பணி தேர்வில் சாதனை படைத்தது குறித்து, பிரீத்தா கூறியதாவது:

நான், கோவை பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லூரியில், பி.டெக்., (ஐ.டி.) படித்தேன். 2012ல், படிப்பை முடித்ததும், ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வந்தேன். சென்னை, அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் பயிற்சி பெற்றேன். 2013ல் நடந்த சிவில் சர்வீஸ் போட்டி தேர்வில், முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றேன். முதன்மை தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக முயற்சித்து, இந்திய அளவில், எட்டாமிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற, கடுமையாக உழைக்க வேண்டும்; படிக்கும்போது கவனம் சிதறக் கூடாது; மனதை ஒருமுகப்படுத்திப் படிக்க வேண்டும். இந்திய வனப்பணியில், துடிப்புடனும், நேர்மையாகவும் திறம்பட பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement