Ad Code

Responsive Advertisement

கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிப்பு: சென்னை கலெக்டர் அலுவலக விழாவில் வெட்டவெளிச்சம்

சென்னை: அரசு விழாக்களின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேற்றைய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


புறக்கணிப்பு ஏன்?

தமிழகத்தில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டிற்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், ஒழுக்கம், பல்திறன் வெளிப்பாடு என, பெற்றோர் மத்தியில் கவர்ச்சிகரமான பல விஷயங்கள் காணப்படுகின்றன. இந்த சூழலுக்கு அரசு பள்ளிகளும் மாறவேண்டிய காலகட்டத்தில், விழிப்புணர்வு என்ற பெயரில் துண்டு பிரசுரம் வினியோகிப்பது மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அரசு எடுக்கும் நடவடிக்கையாக உள்ளது. போட்டிகள் நிறைந்த உலகில் கல்வி, அறிவியல், விளையாட்டு, கலை என, பல வகைகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளால் போட்டி போட முடிவதில்லை. அதற்கான முயற்சிகளும் அரசு பள்ளிகள் தரப்பில் எடுக்கப்படுவதில்லை. இப்படி முடங்கும் அரசு பள்ளிகளை, அரசும் கைகொடுத்து தூக்கி விட தயாராக இல்லை என்பதை, தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் சுதந்திர, குடியரசு தினவிழாக்களின் கலை நிகழ்ச்சிகள் அம்பலமாக்கி வருகின்றன.

* நேற்று, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த, குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி மட்டுமே இடம் பெற்றிருந்தது. 

* சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளில், ஒரு அரசு பள்ளி கூட இடம் பெறவில்லை. ஆனால், சென்னை மாவட்டத்தில், 27 அரசு பள்ளிகள், 10 அரசு ஆதி திராவிடர் நல பள்ளிகள், மழலையர் பள்ளிகள் உட்பட, 314 மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வாகவே உள்ளது. கலை நிகழ்ச்சிகளில் அசத்தும் திறன், அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லையா அல்லது அவர்களை தயார்படுத்தும் திறன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், அரசு பள்ளிகளை பார்க்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை எப்படி அரசு பள்ளிகளில் மனமுவந்து சேர்ப்பர் என்பதே பொதுவான கேள்வியாக உள்ளது.

கலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படுவது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத பொதுத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடியரசு, சுதந்திர தினவிழாக்கள் மட்டுமின்றி, பொதுவான அரசு விழா கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள பள்ளிகளை வரவேற்கிறோம். ஆனால், தனியார் பள்ளிகள் அளவிற்கு, அரசு பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு பள்ளி கல்வித்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் முன்வந்து, மாணவர்களை களம் இறக்கினால், நாங்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாட போகிறோம்? இவ்வாறு, அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.


வாய்ப்பு கிடைப்பதில்லை:

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கூலி தொழிலாளிகள் கூட தங்கள் குழந்தைகள் கலர் சட்டை அணிந்து, வேடங்கள் அணிந்து கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். இது மாணவர்களின் திறனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பு பெரும்பாலான அரசு பள்ளிகளில் கிடைப்பது இல்லை. இதற்கு முதலில் பள்ளிகளையும், அரசு பள்ளி ஆசிரியர்களையும் தான் தயார்படுத்த வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் தானே மாணவர்களை இதுபோன்ற விஷயங்களுக்கு தயார்படுத்த முடியும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.


மாநகராட்சி விதிவிலக்கு!

சென்னை மாநகராட்சியில் நடைபெறும் எந்த ஒரு விழாவிற்கும், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. இதுவரை மாநகராட்சி விழாக்களில் தனியார் பள்ளிகளுக்கு இடம் அளிக்கப்பட்டதில்லை. நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கூட ஆறு கலை நிகழ்ச்சிகள் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரை கொண்டே நடத்தப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement