Ad Code

Responsive Advertisement

மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்: தோப்பில் முகம்மதுமீரான்

மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்களால் மாணவர்களை படைப்பாளியாக உருவாக்க முடியும் என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில்முகம்மதுமீரான் குறிப்பிட்டார்.

பல்கலைக் கழக நிதி நல்கைக்குழு உதவியுடன் திருநெல்வேலி ம.தி.தா. இந்து கல்லூரியின் வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம், அம்பாசமுத்திரம் திருவள்ளுவர் கல்விச் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் சாகித்ய அகாதெமி விருதுபெற்ற தமிழ்ப் புதினங்களில் கதையும் கதைப்பின்னலும் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் ம.தி.தா. இந்து கல்லூரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.கருத்தரங்கினை தொடங்கி வைத்து சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில்முகம்மதுமீரான் பேசியதாவது:

சாகித்ய அகாதெமி விருது படைப்பாளிக்கு கிடைத்த அங்கீகாரம். சிறந்த படைப்பாளிகளை பாராட்டத் தவறக்கூடாது. அந்த வகையில் ம.தி.தா. இந்து கல்லூரி படைப்பாளிகளை பாராட்டி வருகிறது. தமிழக படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாதெமி விருது 5 ஆண்டு்களாக கிடைக்க வில்லை. சிறந்த படைப்புகளும், தகுதியான படைப்பாளிகளும் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது. தகுதியில்லாத நூலுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும்.

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்களால் மாணவர்களை படைப்பாளியாக உருவாக்க முடியும். குழந்தை பருவத்தில் வாசிப்பு பழக்கம் ஏற்படுவது அரிதானது. அக்குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். வாசிப்புத் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனிடமும் திறமை உள்ளது. ஆற்றலை மேம்படுத்த தவறுவது கொலை செய்வதற்கு சமம்.

படைப்புகளை உருவாக்க வெளி உலகுக்கு செல்ல வேண்டியதில்லை. மாணவர்கள் உங்கள் இல்லங்களில் உள்ள நிகழ்வுகளை பதிவு செய்யுங்கள். சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களில் 7 பேர் ம.தி.தா. கல்லூரியில் இருந்து வந்தவர்கள் என்பது தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த பெருமை. உலகுக்கு தமிழறிஞர்களை அடையாளம் காட்டும் பணியை கல்லூரி தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கருத்தரங்கில், அஞ்ஞாடி நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்ற பூமணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ப. சின்னதம்பி தலைமை வகித்தார். திருவள்ளுவர் கல்விச் சமூக சேவை அறக்கட்டளை தலைவர் இரா. வெள்ளைசாமி வாழ்த்தி பேசினார்.

தமிழறிஞர்கள் சண்முகராஜ், ச. கண்ணபிரான், திருவள்ளுவர் கல்விச் சமூக சேவை அறக்கட்டளை பொதுச்செயலர் இ.மா. ராமச்சந்திரன், செயலர் பி.கா. வீரவராஜா, செயற்குழு உறுப்பினர் ச. லெட்சுமணன் மற்றும் முதுகலை, இளங்கலை மாணவர், மாணவிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்த்துறைத் தலைவர் ஆ. செல்லப்பா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கோ. சங்கரவீரபத்திரன் நன்றி கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற முதல் அமர்வில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் மதுரை சு. வெங்கடேசன், திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக் கழக பேராசிரியர் பா. ஆனந்தகுமார், 2 ஆவது அமர்வில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திண்டுக்கல் டி. செல்வராஜ், சாகித்ய அகாதெமி பொதுக்குழு உறுப்பினர் ரா. காமராஜ், 3 ஆவது அமர்வில் ஆந்திரா குப்பம் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் இராக. விவேகானந்தகோபால், 4 ஆவது அமர்வில் தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல்துறைத் தலைவர் நா. ராமச்சந்திரன், மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி பேராசிரியர் வ. அரிஹரன் ஆகியோர் பேசினர்.

புதன்கிழமை நடைபெறும் கருத்தரங்கில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் நாகர்கோவில் மலர்விழி, சென்னை ஜோ.டி.குரூஸ், தமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் அர்ஷியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement