Ad Code

Responsive Advertisement

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் 670 பி.எட்., எம்.எட். படிப்புகளைக் கொண்ட கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

ஆசிரியர் கல்வி கல்லூரிகளுக்கென ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.

அந்த விதிகள் தற்போது செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கும், புதிய கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனவும் அது தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புதிய விதிமுறைகள் தேசியக் கவுன்சிலின் இணையளத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான புதிய விதிமுறைகளை நிறைவேற்றுவதாக 21 நாள்களுக்குள் அனைத்து கல்வி நிறுவனங்களும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புதிய விதிமுறைகள்படி பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான கால அளவு ஓராண்டிலிருந்து, இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்பது, புதிய விதிப்படி 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் சட்டத்தை பின்பற்றி வருகிறோம். புதிய விதிகளை நடைமுறைப்படுத்தினால், தனியார் கல்வி ஒழுங்குமுறைச் சட்டத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும்.

இரண்டும் தனித் தனிச் சட்டங்கள். இந்தப் புதிய விதிமுறைகளை பின்பற்றினால் கல்வி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது எங்களை மிரட்டுவது போல் உள்ளது. எனவே, புதிய விதிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். 21 நாள்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், வழக்கு நிலுவையில் இருப்பதால், 21 நாள்களுக்குள் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்க வலியுறுத்த மாட்டோம் என்று உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, மனுவுக்கு மார்ச் 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement