Ad Code

Responsive Advertisement

கல்வியியல் படிப்பு தொடர்பான என்.சி.டி.இ., விதிகள் சரியில்லை

பி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.

பல திட்டங்கள்:

தரமான ஆசிரியர்களை உருவாக்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கல்வியியல் படிப்புகளுக்கான கால அளவை மாற்றியும், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றில் புதிய விதிமுறைகளை வகுத்தும், என்.சி.டி.இ., அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக, பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான காலம், இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது; கல்லூரிகளில் இடவசதி, ஆசிரியர் எண்ணிக்கையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த விதிகளை, பல்கலைகள் மற்றும் கல்லூரிகள், வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., சமீபத்தில் அறிவித்தது. அடுத்த கல்வியாண்டு, ஜூனில் துவங்குகிறது. இதற்கான அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில், கல்வியியல் கல்லூரிகள் தள்ளப்பட்டு உள்ளன

இதுகுறித்து, தனியார் கல்வியியல் கல்லூரி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 

  • பி.எட்., - எம்.எட்., படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டால், மாணவர் சேர்க்கை பெருமளவு குறைய வாய்ப்பு உள்ளது.


  • பி.எட்., கல்லூரிக்கு, 1,500 சதுர மீட்டர் இடவசதி இருந்தால் போதும். இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டால், கூடுதலாக, 500 சதுர மீட்டர் இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்கிறது விதி.


  • தற்போது, ஓராண்டு படிப்பிற்கு, ஒரு முதல்வர் மற்றும், ஏழு ஆசிரியர் உள்ளனர். இரண்டு ஆண்டிற்கு, கூடுதலாக, எட்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்கிறது என்.சி.டி.இ.,


  • முதலாண்டிற்கு மட்டுமே, கல்விக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டிற்கு கல்விக்கட்டணம் வசூலிக்க விதிகள் வகுக்கப்படவில்லை. புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பும் இல்லை. இது போன்ற பிரச்னைகள் உள்ளன. இதில், மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதி, பாடத்திட்டம் போன்றவற்றை இந்தாண்டு, அக்., 31ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என, என்.சி.டி.இ., உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கடிதம்:

இதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மாணவர் சேர்க்கை மற்றும் பிரச்னைகள் குறித்து நாங்கள், தமிழக அரசு மற்றும் என்.சி.டி.இ.,க்கு கடிதம் எழுதி உள்ளோம். இது தவிர, சமீபத்தில், விதிகளை ஏற்பதாக, 20 தினங்களுக்குள் கடிதம் அளிக்கும்படி, என்.சி.டி.இ.,யிடம் இருந்து, கடந்த மாதம், 31ம் தேதி எங்களுக்கு சுற்றறிக்கை வந்துள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி, கோர்ட்டை நாடி உள்ளோம். இந்த பிரச்னை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல; அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் உண்டு. எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement