Ad Code

Responsive Advertisement

கல்வித் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி: பொள்ளாச்சி வி.ஜெயராமன்

கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது அதிமுக ஆட்சி என்று சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சனிக்கிழமை பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 67-ஆவது பிறந்த நாளையொட்டி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வினா-விடை புத்தகம் வழங்கும் விழா, தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் உடுமலை ஜிவிஜி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா வினா-விடை புத்தகங்களை வழங்கி தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியது:

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காகவும், கல்வித் துறைக்காகவும் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கி, கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதிமுக ஆட்சி.

தில்லியில் நடைபெற்ற மாநில கல்வித் துறை அமைச்சர்கள் மாநாட்டில், கல்வியில் முதன்மை பெற்ற தமிழகத்திற்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது சாதனையாகும்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பட்டம் படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், காலணி, புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுக்கிறது. தமிழகம் கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றார்.

இதில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் வினா-விடை புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வேண்டும் என மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இவ்விழாவில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், எம்எல்ஏ-க்கள் சி.சண்முகவேல், என்.எஸ்.என். நடராஜன், கே.பொன்னுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement