Ad Code

Responsive Advertisement

ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: பதில் அளிக்க அரசுக்கு நோட்டீஸ்

அரசு உயர் நிலைப் பள்ளியில் பணிபுரியும் 7 ஆசிரியைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக கொளத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஏ.சாந்தி, கே.சி.கவிதா உள்பட ஏழு ஆசிரியைகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: 

 நாங்கள் பணி புரியும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ளது. இது இருபாலர் பயிலும் பள்ளி. மொத்தம் 151 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு பணியாற்றும் 8 ஆசிரியர்களுமே பெண்கள்தான்.

 எங்கள் பள்ளி கடந்த 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியரான எம்.கே.பீம்குமார் கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.

 பள்ளியில் பொறுப்பேற்ற சில நாள்களிலிருந்து, ஆசிரியைகளிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார். நேரடியாகவும், மறைமுகமாகவும் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். எங்களால் வெளியில் கூற முடியாத அளவுக்கு ஆபாசமாக பேசுவது, நடந்து கொள்வதுமாக அவரது செயல் இருந்தது.

 இது நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இது தொடர்பாக காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அதிகாரியிடம் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தோம். ஆனால், எங்களது புகார்களை அவர் ஏற்க மறுத்துவிட்டார். மேலும், பள்ளிக் கல்வித் துறைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கும் விரிவான கோரிக்கை மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

 எனவே, தலைமை ஆசிரியரின் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்கவும், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினர்.

 இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்குரைஞர் ஜி.சங்கரன் ஆஜரானார்.

 மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் அளித்த கோரிக்கை மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து டிசம்பர் 22-ஆம் தேதிக்குள்  பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement