Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வகுப்பில் மாணவரின் கற்றல் அடைவுத்திறனை மேம்படுத்த, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும், நடப்பு கல்வியாண்டு முதல், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தாங்களாகவே தங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யவும், வகுப்பில் எதிர்பார்த்த நிலையை அடையவும், தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாட்டை ஆய்வு செய்து, அதன் மூலம் தேவையான முன்னேற்ற ஆலோசனைகள் வழங்க இத்திட்டம் வகுக்கப்பட்டது.நான்கு நிலை அளவுகோலினை அடிப்படையாக கொண்டு, வகுப்பறை நிகழ்வுகளின் வெளிப்பாடுகளை அளவிட தர அளவீடுகள் வடிவமைக்கப்பட்டது. எதிர்பார்த்த நிலைகளை அடையாமை, நெருங்குதல், அடைதல், மேல், என நான்கு தர அளவீடுகள் வகுக்கப்பட்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 12 பக்கம் அடங்கிய படிவம் சமீபத்தில் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் ஈரோடு, கோபி ஆகிய இரு கல்வி மாவட்டகளுக்கும் வழங்கப்பட்டது. வகுப்பாசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விபரங்களை, ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆய்வு செய்து, அந்தந்த படிவத்தை, யூனியன் வாரியாக உள்ள வட்டார வளமையங்களுக்கு அனுப்பியுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 14 யூனியனுக்கும், பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விபரங்களும், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடுக்கு என உருவாக்கப்பட்ட, ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.வகுப்பு, பாடம், மொத்த மாணவர்கள், 40 சதவீதத்துக்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள், 80 சதவீதம் வரை அல்லது அதற்கு மேல் மார்க் எடுத்தவர்கள், மதிப்பீடு மற்றும் பின்னூட்டம், மாணவர்களுடனான உறவு முறை, சக பணியாளர்களுடன் உறவு முறை, பணியிட பயிற்சி, பங்கேற்றல் மற்றும் சுயகற்றல், புதுமைப்படைத்தல் மற்றும் ஆய்வுகள் படைத்தல், பள்ளி வளர்ச்சி செயல்பாடுகளில் பங்கு கொண்டு உதவுதல், ஆசிரியர் வருகை, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.மதிப்பீட்டில் ஆசிரியர் முழு திருப்தி அடைந்தது மற்றும் முன்னேற்றம் அல்லது உதவி தேவை குறித்து சுருக்கமான விபரம், தலைமை ஆசிரியரின் குறிப்பு, குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநரின் குறிப்பு மற்றும் தொகுக்கப்பட்ட படிவத்தின் விபரங்கள் என அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement