Ad Code

Responsive Advertisement

வருங்கால வைப்பு நிதி வட்டியை கூட்டலாமே !

 மனிதர்கள் யாரும் என்ன நினைத்தாலும் தப்ப முடியாதது முதுமைதான். ஆண்டொன்று போனால் நிச்சயமாக வயது ஒன்று போய்விடும். அதேபோல இளமையில் மேற்கொள்ளும் உடல் உழைப்பு போல முதுமையில் உழைக்க முடியாது. வயதுக்கு ஏற்றபடி உடலில் பல உடல் நலக்குறைவுகள் ஏற்படும். ஆக முதுமையில் உழைத்து வருமானம் ஈட்டவும் முடியாது.
அந்த நேரத்தில் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்ட பணமும் வேண்டும், மருத்துவ செலவை ஈடு கட்டவும் பணம் வேண்டும். இதற்கெல்லாம் கையில் சேமிப்பு வேண்டும். இந்த நிலையில் அமைப்பு ரீதியாக இல்லாமல் அன்றாடம் வேலை செய்து கூலி வாங்குபவர்களுக்கு சேமிப்பு என்பது அவர்களாகவே தங்கள் செலவுக்கு போக சேர்த்து வைத்தால்தான் உண்டு. ஆனால் இப்போது மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களினால் பல்வேறு தொழில்களுக்கென தனி வாரியங்கள் அமைக்கப்பட்டு அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்கின்றன.

இத்தகைய தொழிலாளர்களிடம் அவர்கள் பெற்று வரும் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பிராவிடண்டு பண்டுக்காக பணம் பிடிக்கப்படுகிறது. இதுவரையில் அவர்கள் பெற்று வரும் அடிப்படை சம்பளத்தில் 6500 ரூபாய் உச்ச வரம்பு என்று நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையில் 12 சதவீத தொகையை அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்து வந்தார்கள். தொழிலாளர்களிடம் இருந்து எவ்வளவு தொகை பிடிக்கப்படுகிறதோ, அதே தொகைக்கு ஈடாக அவர்களை வேலைக்கு வைத்து இருக்கும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளும் செலுத்த வேண்டும்.

இந்த இரு தொகைகளும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மாதந்தோறும் 15–ந் தேதிக்குள் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இந்த தொழிலாளர்களை வேலைக்கு வைத்து இருப்பவர்கள் கட்டும் 12 சதவீத தொகையில் 8.33 சதவீதம் அந்த தொழிலாளியின் ஓய்வு காலத்தில் வழங்கப்படும் பென்ஷன் திட்டத்துக்காக சென்று விடும். இப்போது இந்த அடிப்படை சம்பள உச்ச வரம்பு 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் அதிக பலன் அடைவார்கள். இதனால் தொழிலாளர்கள் பயன் அடைந்தாலும் சிறிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு கூடுதலாக நிதிச்சுமை ஏற்படும். கடந்த ஆண்டு கணக்குப்படி 7 லட்சத்து 43 ஆயிரம் நிறுவனங்களும், 8 கோடியே 87 ஆயிரம் தொழிலாளர்களும் மாதா மாதம் பிராவிடண்டு பண்டுக்காக பணம் கட்டுகிறார்கள். இதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் பணம் கட்டி ஓய்வு பெற்ற 49 லட்சம் பேர்களுக்கு மாதா மாதம் பென்ஷன் வழங்கப்படுகிறது. இவர்களில் 32 லட்சம் பேர்கள் மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கீழும், அதில் 13 லட்சம் பேர்கள் மாதம் 500 ரூபாய்க்கு கீழுமே இந்த பென்ஷனைப்பெற்று வந்தார்கள். சமீபத்தில் இவர்கள் அனைவருக்குமே குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கவேண்டும் என்று மத்திய அரசாங்கம் உத்தரவிட்டு வழங்கி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

ஏராளமான தொழிலாளர்கள் வேறு எந்த சேமிப்பும் இல்லாமல், வேறு சேமிப்புகளில் பணம் சேமிக்க முடியாத அளவில் செலவுகள் இருக்கும் நிலையில் அவர்களின் வயதான காலத்துக்கு கைகொடுப்பது ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்கும் பிராவிடண்டு பணமும், மாதா மாதம் கிடைக்கும் பிராவிடண்டு பண்டு பென்ஷனும்தான். இந்த நிலையில் அவர்களிடம் இருந்து பிடிக்கும் தொகைக்கும், அவர்களை வேலைக்கு வைத்து இருப்பவர்கள் கட்டும் தொகைக்கும் கொடுக்கப்படும் வட்டி கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் 8.75 சதவீதம்தான் என்று அறிவித்து இருப்பது தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே இந்த திட்டத்தில் கட்டப்பட்ட 27 ஆயிரம் கோடி ரூபாய் இப்போது இயக்கத்தில் இல்லாமல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இயக்கத்தில் இருக்கும் தொழிலாளர்களின் பணத்துக்கு சற்று கூடுதலாக வட்டி அறிவிப்பதை பரிசீலிக்க வேண்டும் என்பதே தொழிலாளர்களின் கோரிக்கையாகும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement