Ad Code

Responsive Advertisement

தேசிய உயர் கல்வித் தகுதி வரையறை: கருத்துகளை வரவேற்கிறது யுஜிசி

தேசிய உயர் கல்வித் தகுதி வரையறையை (என்.ஹெச்.இ.கியூ.எஃப்) உருவாக்குவது தொடர்பாக கருத்துகள், ஆலோசனைகளை கல்வியாளர்கள், பொதுமக்களிடமிருந்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கோரியுள்ளது.

கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியப் பரிந்துரையின் பேரில், தேசிய அளவில் ஒரே மாதிரியான உயர்கல்வி முறையைக் கொண்டு வரும் வகையில் "தேசிய உயர் கல்வித் தகுதி வரையறையை' உருவாக்க யுஜிசி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற உயர் கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் குறித்து வெளிப்படைத் தன்மையை உருவாக்கவும், எந்தெந்தப் படிப்புகள் எதெதற்கு இணையானவை என தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய வகையில் உரிய வசதி செய்து தருவதே இந்த வரையறையை உருவாக்குவதன் நோக்கமாகும். ஒரு மாணவர் படிப்பை முடித்து பட்டம் பெறுவதற்கு முன்பே, தான் எதற்குத் தகுதியானவர் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ளக் கூடிய அளவுகோலாகவும் இந்த வரையறை விளங்கும்.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் இந்த உயர் கல்வித் தகுதி வரையறை ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்தியா இப்போதுதான் இதற்கான முயற்சியை எடுத்துள்ளது.

இதை உருவாக்குவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் cppiisection@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் கருத்துக்களை எழுதி அனுப்பலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement