Ad Code

Responsive Advertisement

கேந்திரிய வித்யாலயா 50 ஆண்டுகள் நிறைவு: நினைவு அஞ்சல் தலை வெளியீடு

இந்திய அஞ்சல் துறை சார்பில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் தலை, உறை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

சென்னையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் 51-ஆவது ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில், கேந்திரிய வித்யாலயா சங்கதனின் சென்னை மண்டலம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை வெளியிட்டு, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸெண்டர் பேசியதாவது:

மத்திய அரசின் நிறுவனமான கேந்திரிய வித்யாலயா, வெற்றிகரமாக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், சிறப்பு அஞ்சல் தலை, அஞ்சல் உறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசால், ஆண்டுதோறும் 42 முதல் 50 சதவீத அஞ்சல் தலைகள் மட்டுமே முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடும் வண்ணம் வெளியிடப்படுகிறது. இவற்றில் 25 சதவீதம் முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள் சார்ந்ததாகும். மீதமுள்ளவை தாவரங்கள், விளையாட்டு, பாதுகாப்பு, கலாசாரம் போன்ற பல துறைகளைச் சார்ந்தவையாக இருக்கும்.

உலகளவில் தீவிர அஞ்சல் தலை சேமிப்பாளர்களாக 6 கோடி பேர் உள்ளனர். இருப்பினும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தனது சேவையை ஏழை, எளிய, நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கும் வழங்க முன் வர வேண்டும்.

தற்போது, ஹார்வர்டு பல்கலைக்கழகம் கூட குறைந்த கட்டண அடிப்படையில் பாடங்களை கற்பிக்கத் தொடங்கியுள்ளனர். ஆகையால், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் குறைந்தக் கட்டணத்தில் குழந்தைகளுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில், கேந்திரிய வித்யாலயா தென் மண்டல துணை ஆணையர் எஸ்.எம்.சலீம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ஏ.பி.மண்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement