Ad Code

Responsive Advertisement

அரசு போக்குவரத்து கழகத்தில் ஜனவரி 3ம் தேதி புதிதாக 2,500 பேர் நியமனம்: எழுத்துத் தேர்வு பற்றி ஆலோசனை

சென்னை உள்பட 8 அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2,500 பேரை அடுத்த மாதம் 3ம் தேதி நியமனம்  செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர்களுக்கான எழுத்துத் தேர்வு நடத்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில்  சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உள்பட மொத்தம் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இவற்றில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள்,  இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டவைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, கடந்த மாதம் 3ம் தேதி இதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் 20ம் தேதி வரை விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 10ம் தேதி வரை  பெறப்பட்டது. பின்னர் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவில், “ போக்குவரத்து கழகங்கள் பணியாளர்களை புதிதாக நியமனம் செய்யும் போது அவர்களுக்கு எழுத்துத்  தேர்வும் நடத்த வேண்டும்“ என தெரிவித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டு,  அவர்களுக்கான நேர்முகத் தேர்வு அந்தந்த போக்குவரத்து கழகங்களில் நடந்து வரும் நிலையில், இவர்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் நேர்முகத் தேர்வு நடந்து வருகிறது. 

நீதிமன்ற உத்தரவுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளதால், இந்த பணி நியமனங்களுக்கு எழுத்துத் தேர்வு வைக்கலாமா,  வேண்டாமா என ஆராய்ந்து வருகிறோம். இருப்பினும் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்கள் என 2,500 பேரை மட்டும் தற்போதைய நடைமுறைப்படி அடுத்த  மாதம் 3ம் தேதி பணி நியமனம் செய்ய உள்ளது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement