Ad Code

Responsive Advertisement

தேர்வு அறையில் ஆசிரியரை தாக்கிய பிளஸ்-2 மாணவர் இடைநீக்கம்

தேர்வு அறையில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பிளஸ்-2 மாணவர் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

அரையாண்டுத் தேர்வு

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கீழ பருத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர், பிச்சை. இவருடைய மகன் குமார் (வயது17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வீரசோழன் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற்றது.

குமார், தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மாணவர்களுடன் பரீட்சை எழுத உட்கார்ந்து இருந்தார். அந்த அறை பொறுப்பாளராக வந்த பொருளியல் ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர், தேர்வு எழுதும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது குமார், ஆசிரியரை கேலி செய்ததாக கூறப்படுகிறது.

வாக்குவாதம்

இதைத்தொடர்ந்து அவரை வெளியே செல்லுமாறு பிரான்சிஸ் சேவியர் கூறினார். வெளியே சென்ற குமார் பக்கத்து அறையில் வினாத்தாள் பெற்றுக்கொண்டு மீண்டும் தேர்வு அறைக்குள் நுழைய முயன்றார். அவரை உள்ளே நுழையவிடாமல் ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் தடுத்தார்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென்று குமார், ஆசிரியர் பிரான்சிஸ் சேவியரை சரமாரியாக தாக்கினார். இதைப் பார்த்து ஓடிவந்த மற்ற ஆசிரியர்கள், குமாரை பிடித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் மேலதிகாரியின் உத்தரவின்பேரில் குமார் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

தேர்வு புறக்கணிப்பு

இந்தநிலையில், மாணவர் குமாரை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரி, அந்த பள்ளியை சேர்ந்த 70 மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்வை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுதச் சென்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement