Ad Code

Responsive Advertisement

பள்ளி மாணவி கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர் கைது

வேலூர் மாவட்டம், குடியாத்தம், கே.வி.குப்பம் அருகே 6-ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், 10-ஆம் வகுப்பு மாணவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தேர்வு எழுதுவதற்காக சைக்கிளில் திங்கள்கிழமை காலை சென்ற கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மறுநாள் காலை கே.வி.குப்பத்தை அடுத்த கல்யாண பெரியாங்குப்பம் அருகிலுள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கரும்புக் காட்டு முள்புதரில் மாணவியின் சடலம், கை, கால்கள் கட்டப்பட்டு, கழுத்துப் பகுதி துப்பட்டாவால் இறுக்கப்பட்ட நிலையில் உடலில் பலத்த காயங்களுடன் கிடந்தது.

சடலத்தை மீட்ட போலீஸார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலையில் 3 மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும், மாணவி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது மக்கள் சந்தேகம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், அதே பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயிலும் கல்யாண பெரியாங்குப்பம், கொல்லைமேட்டைச் சேர்ந்த 15 வயது மாணவருக்கு மட்டுமே கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அந்த மாணவரை தனிப்படை போலீஸார் காட்பாடிக்கு புதன்கிழமை பிடித்து வந்து வாக்குமூலம் பெற்றனர்.

பின்னர், அவர் வேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மும்மூர்த்தி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை சிறுவர் சீர்திருத்த சிறையில் ஒருவார காலத்துக்கு காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

பொது மக்கள் மறியல்: இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை பெற்றோர் பெற மறுத்தனர். கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே பொது மக்கள் திரளானோர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் குடியாத்தம்- காட்பாடி சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து தடைபட்டது.

பள்ளிகளில் அஞ்சலி: மாணவியின் கொடூரக் கொலையை அடுத்து, வேலூர் நகரில் தோட்டப்பாளையம் மகளிர் பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் 2 நிமிடம் மெüன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகளிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவி படித்த பள்ளிக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

பள்ளி நிர்வாகம் மீது புகார்: கொலை வழக்கில் கைதான மாணவர் வேறு சில மாணவர்களுடன் சேர்ந்து மாணவியரை கிண்டல் செய்து வந்துள்ளதாகவும், கொலை செய்யப்பட்ட சிறுமியிடம் ஈவ்-டீசிங்கில் தொடர்ந்து சில மாணவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியதால்தான் கொலை நிகழ்த்துள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

ரூ.3 லட்சம் நிதியுதவி

பாலியல் பலாத்கார முயற்சியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசு வகுத்துள்ள பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு திட்டத்தின்படி, கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு முதல்வர் பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement