Ad Code

Responsive Advertisement

அரசு பள்ளி மாணவியருக்கு கழிப்பிட வசதி.. ஆய்வுக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சில பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை. போதுமான கழிப்பிட வசதி இல்லாமல், மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கழிப்பிட வசதியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்றியம் வாரியாக குழு அமைத்து, பள்ளிகளில் கள ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு துவங்கியுள்ளது.

ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழுவினருக்கு, ஊரக வளர்ச்சித்துறை மூலம், தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விளக்க கூட்டம், மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் நேரடியாக கள ஆய்வு நடத்தி, முறையாக அறிக்கை தயாரிக்க வேண்டும். பெரும்பாலும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே கழிப்பிடம் அமையும் வகையில் திட்டமிட வேண்டும். எக்காரணத்தை கொண்டும், ரோட்டை கடந்து மாணவியர், கழிப்பிடம் செல்வது போல் அமைக்க கூடாது. மாணவர் கழிப்பிடமும், மாணவியர் கழிப்பிடமும் அருகருகே இருக்கக் கூடாது. தனித்தனி கழிப்பிடங்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாணவிகளுக்கு அமைக்கப்படும் கழிப்பிடத்தை ஆசிரியைகள் பயன்படுத்த கூடாது. கட்டப்படும் கழிப்பிடத்தை பூட்டி வைத்துக்கொண்டு, சாவி இல்லை என்று தட்டி கழிக்கவும் கூடாது. தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, தலா 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிப்பிடம் அமைக்க வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கழிப்பிட வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும். எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,நிதியில் கழிப்பிடம் அமைக்க, ஒன்றிய நிர்வாகங்கள் ஆவண செய்ய வேண்டும். மாணவியருக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்துவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்பதால், குழுவினர் சிறப்பாக கள ஆய்வுசெய்து, அறிக்கை அளிக்க வேண்டும். இல்லை என்றால், கோர்ட் அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement