Ad Code

Responsive Advertisement

மனப்பாடம் செய்யாமலேயே மதிப்பெண் அள்ளலாம்! 'ஜெயித்துக்காட்டுவோம்' நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அறிவுரை

, 'தினமலர் - ஜெயித்து காட்டுவோம்' நிகழ்ச்சியில், முதல் நாளான நேற்று, காலையில் நடந்த முதல் அமர்வில், கோவை சர்வஜனா பள்ளியில் இருந்து, தமிழ் பாடம் குறித்து பங்கஜம்மாள், ஆங்கிலம் குறித்து மெஹர்நிஷா, கணிதம் குறித்து ஸ்ரீவித்யா, அறிவியல் குறித்து மீனாலோசனி, சமூக அறிவியல் குறித்து மஞ்சுளா ஆகியோர் பேசினர்.
இரண்டாவது அமர்வில், ஆங்கில வழி மாணவர்களுக்கு எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் அன்வர் பாட்ஷா (தமிழ்), ஷோபா (ஆங்கிலம்), லதா மணி (கணிதம்), கீதா மோகன் (உயிரியல்), கிருஷ்ணவேணி (வேதியியல் மற்றும் இயற்பியல்), ஜெயந்தி வாசன் (வரலாறு), ஜெயந்தி நாயகம் (புவியியல்) ஆகியோர் பேசினர்.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வழங்கிய ஆலோசனைகள்: 

தமிழில் இல்லை தடுமாற்றம்
பங்கஜம்மாள் (தமிழ்): தமிழ் பாடத்தில், மதிப்பெண் எடுப்பது மிகவும் சுலபம். பிற பாடங்களை போல், மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கருவை புரிந்து கொண்டாலே போதும்; மனப்பாடம் செய்யாமல் மதிப்பெண்களை எளிதாக பெறலாம். தமிழ் பாடத்தில், முதல் தாளை பொறுத்தவரை, அனைத்துமே புத்தகத்தில் உள்ளதை படித்து எழுதினால் போதுமானது. மாணவர்கள் மனப்பாடப்பகுதியில் தான் சற்று தடுமாறுவது உண்டு. மனப்பாடப்பகுதிக்கு சிறப்புக் கவனம் செலுத்தி படித்தால், சுலபமாக அதிக மதிப்பெண்களை பெறலாம். எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை மற்றும் அடித்தல்- திருத்தம் செய்யாமல், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இடம் விட்டு தெளிவாக எழுத வேண்டும்.
தமிழ் இரண்டாம் தாளை எடுத்துக்கொண்டால், இலக்கண வினாக்கள் மற்றும் அணியைத் தவிர, அனைத்துமே வகுப்பறையில் கவனித்ததை எழுதினால் போதுமானது. படித்து மனப்பாடம் செய்வதற்கு இரண்டாம் தாளில் எதுவும் இல்லை. பழைய பொதுத்தேர்வு வினாத்தாள்களை படித்து பயிற்சி செய்தாலே, தமிழ் பாடத்தில், தடுமாற்றம் இல்லாமல், சுலபமாக அதிக மதிப்பெண் பெற்றுவிடலாம்.

ஆங்கிலத்தை அடிமையாக்குங்கள்!
மெஹர்நிஷா (ஆங்கிலம்): பொதுவாகவே, தமிழ் வழிக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே ஆங்கிலம் கடினம் அல்ல. பழக்கத்தால் ஆங்கிலத்தை அடிமையாக்கி விடலாம், என்பதை மாணவர்கள் முதலில் புரிந்து, பயத்தை தவிர்க்க வேண்டும்.ஆங்கிலம் முதல் தாளை பொறுத்தவரை, 35 மதிப்பெண் மட்டுமே கேள்வி பதில்களுக்கும், மனப்பாட பகுதிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 65 மதிப்பெண்களுமே இலக்கண பகுதிக்குதான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தான் மாணவர்கள் அதிக பயிற்சி எடுக்க வேண்டும். முதலில் இலக்கணத்தில், எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதை அறிந்து, தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இரண்டாம் தாளை பொறுத்த வரை சற்று பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்கள் கட்டுரைப்பகுதியில் அதிக கவனம் செலுத்தினால், குறைந்தபட்ச மதிப்பெண்களை சுலபமாக பெற்று விடலாம். ஆங்கிலத்திற்கு பிற பாடங்களை போல் அதிக நேரம் ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. பொதுவாக ஆங்கிலம் இரண்டு தாள்களிலும் இலக்கணப்பிழை தவிர்க்கும் பட்சத்தில், அதிக மதிப்பெண்களை சுலபமாக பெறலாம்.ஒரு மதிப்பெண் வினாவில் கவனம்

லதா மணி (கணிதம்): மாணவர்கள் கணிதத்தில் பெரும்பாலும், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வாங்குவதற்குதான் முயற்சிப்பர். கணிதத்தை பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண் பெறுவது மிகவும் சுலபம். படிப்பில் சற்று பின் தங்கிய மாணவர்கள் 'செட்ஸ், மேட்ரீசஸ், மற்றும் பிராபபிலிட்டி' ஆகிய தொகுப்புகளை படித்தாலே குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று விடலாம். இதற்கு மேலாக நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற வேண்டும் என முயற்சிக்கும் மாணவர்கள் ஒரு மதிப்பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெரும்பாலும், கணிதத்தில் சதம் பெறும் வாய்பை தவறவிடும் மாணவர்கள் ஒரு மதிப்பெண்களில் தான் மதிப்பெண் இழக்கின்றனர். இதை தவிர, கணிதம் மற்ற பாடங்களை போல் மனப்பாடம் செய்து எழுதிட முடியாது. நுாறு முறை ஒரு கேள்வி பதிலை பார்த்தாலும், முதல் முறை பார்ப்பது போல் தான் இருக்கும். எனவே, மாணவர்கள் கணக்குகளை போட்டு பார்த்தல் மிகவும் அவசியம்.

ஆர்வம் இருந்தால் அறிவியல் எளிது!
மீனாலோசனி (உயிரியல்): அறிவியல் என்பது புதிதாக ஒன்றும் இல்லை. புரிந்து படிக்கும் பட்சத்தில் முழு மதிப்பெண் எடுப்பது மிக சுலபம். அறிவியல் பாடத்தின் மீது ஆர்வத்தை அதிகரித்துக்கொள்வது அவசியம். உயிரியல் பிரிவில், படங்கள் மட்டும் ஒன்பது மதிப்பெண்களுக்கு கேட்கப்படுகிறது. இதனால், படங்களை தெளிவாக வரைந்து பாகங்களை குறிப்பது அவசியம். படங்களை மீண்டும் மீண்டும், வரைந்து பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். 100 மதிப்பெண்களை நோக்கி, பயணிக்கும் மாணவர்கள் பயிற்சி வினாக்களை நன்கு தயார்படுத்திக்கொள்வது அவசியம்.

பிற பாடங்கள் போன்று அல்லாமல், அறிவியல் பாடத்தை, 75 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் எழுதுகின்றனர். இதனால், நிதானமாக கேள்விகளை தேர்வு செய்து எழுதவேண்டும். பதட்டம், அவசரம் தேவையில்லை.கேள்விக்கான பதில்களை தெளிவாக எழுதுவது அவசியம். கேள்வி எண் மற்றும் உட்பிரிவு வரிசையை தவறாமல் எழுதுவது மதிப்பெண்களை இழக்காமல் இருக்க வகைசெய்யும். தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் கவனம் முழுவதும், தேர்வில் மட்டுமே இருக்கவேண்டும். ஆர்வத்துடன் புரிந்து படித்தால், அறிவியல் பாடத்தில், முழு மதிப்பெண் பெறுவது என்பது எளிது.

வரலாற்று சம்பவங்களை தொடர்புபடுத்தி படியுங்கள்!
மஞ்சுளா (சமூக அறிவியல்): சமூக அறிவியல் பாடம் மிகவும் எளிமையானது. கண்ணை மூடிக்கொண்டு மனப்பாடம் செய்வதை விட, நிகழ்ச்சிகளுடன் தொடர்புபடுத்தி படித்தால், எளிதாக நினைவுபடுத்திக் கொள்ளலாம். கேள்விக்கான பதில்களை, இடைவெளி விட்டு எழுதவேண்டும். பத்து மதிப்பெண் வினாக்களுக்கு, கட்டுரை போன்று தொடர்ந்து எழுதாமல், உட் தலைப்புகளால் பதில்களை தெளிவுபடுத்தி காண்பிக்கவேண்டும்.காலக்கோடு, வரைபடம் ஆகியவற்றில் எளிதாக முழு மதிப்பெண் பெறலாம். அதிகப்படியான பயிற்சி இருந்தால் போதுமானது. காலக்கோடு கேள்விக்கு பதிலளிக்கும்போது, ஆண்டுகளுடன் கட்டாயம் நிகழ்வுகளையும் குறிப்பிடவேண்டும். வரைபடத்தை பொறுத்த வரை, பென்சிலால் குறித்தால் போதுமானது; வண்ணங்கள் தீட்டவேண்டாம். வரைபடங்களை பொறுத்தவரை, அடித்தல் திருத்தல் மதிப்பெண்களை குறைத்துவிடும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement