Ad Code

Responsive Advertisement

தேர்வுத் தாள் மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா?

பல்கலைக்கழகத் தேர்வு மறுமதிப்பீடு கட்டண முறையில் மாற்றம் கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏழை மாணவர்களிடையே எழுந்துள்ளது. மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்து அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறும்பட்சத்தில், செலுத்திய கட்டணத்தைப் பல்கலைக்கழகம் திரும்பத் தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பல்கலைக்கழகங்கள் பருவத் தேர்வு முடிவுகளை வெளியிட்டதும், மதிப்பெண் குறைந்துள்ளதாகக் கருதும் மாணவர்களிடமிருந்து தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பங்களை வரவேற்கும். இவ்வாறு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஒரே முறையாக, தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் வசூலிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை, தாள் ஒன்றுக்கு ரூ.700-ஐ வசூலிக்கிறது. ஆனால், ஒரே முறையாக அல்லாமல் தேர்வுத் தாள் நகலுக்கு ரூ. 300 கட்டணமும், பின்னர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க ரூ. 400 எனவும் இரண்டு நிலைகளாக வசூலிக்கிறது.

இந்த நிலையில், மறு மதிப்பீட்டுக்குத் தாள் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய தொகை செலுத்துவது தங்களுக்கு பெரும் சிரமமாக இருக்கும் என சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரிகளில் உள்ள ஏழை மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியது:

தேர்வுத் தாள்களைத் திருத்தும் பேராசிரியர்களின் கவனக் குறைவு காரணமாகவே இதுபோன்று மதிப்பெண் குறையும் நிலை ஏற்படுகிறது. இதற்கு மாணவர்கள் எப்படி பொறுப்பாளர்களாக முடியும்?

மறுமதிப்பீட்டின்போது ஒரு மதிப்பெண் கூடுதலாக வந்தாலும், அதற்கு அந்தத் தாளைத் திருத்திய பேராசிரியரின் கவனக் குறைவுதான் காரணம். எனவே, இவ்வாறு மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் கூடினால், செலுத்திய கட்டணத்தைப் பல்கலைக்கழகம் திருப்பித் தருகிற வகையில் நடைமுறையில் மாற்றம் செய்யவேண்டும் என்றனர்.

இதுகுறித்து ஈரோட்டைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியது:

மறுமதிப்பீட்டுக்கு இவ்வளவு பெரிய தொகை வசூலிப்பது நியாயமல்ல. ஏனெனில் இதற்கு அந்தத் தாளை திருத்துகின்ற பேராசிரியர்தான் முக்கியக் காரணம் என்பதோடு, சில பொறியியல் கல்லூரிகள் தேர்வுத் தாள் திருத்தும் பணியின்போது "விடை கையேட்டை' (கீ ஆன்ஸர்) முறையாக அளிப்பதுமில்லை.

 உதாரணமாக, ஈரோடு ஐ.ஆர்.டி.டி.-யில் (சாலைப் போக்குவரத்து நிறுவனப் பொறியியல் கல்லூரி) கடந்த முறை எந்தத் தாளுக்கும் விடை கையேடு வழங்கப்படவில்லை. இதனால், தேர்வுத் தாளைச் சரியாகத் திருத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, மறுமதிப்பீட்டின்போது மதிப்பெண் அதிக வித்தியாசத்தில் கூடுகிறபோது, அந்தத் தாளைத் திருத்திய பேராசிரியரிடம் பணத்தைப் பெற்று அதன் மூலம் மாணவருக்குக் கட்டணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றார்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியர் வெங்கடேசன் கூறியது:

தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் வசூலிப்பது என்பது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இப்போது விண்ணப்பிக்கும் முன்னர் ரூ.300 கட்டணம் செலுத்தி தேர்வுத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். பின்னர், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் ரூ. 400 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

கட்டணத்தைத் திருப்பித் தருவது என்பது இயலாது. ஏனெனில் மறு மதிப்பீடு பணிக்கு வரும் பேராசிரியகளுக்கு கட்டணம், பயணப்படி ஆகியவை வழங்க வேண்டும் என்றார்.

இது குறித்து சென்னைப் பல்கலைக்கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறை. அதைத் திருப்பித்தர இயலாது.

ஆனால், இது முழுக்க, முழுக்க தேர்வுத் தாளை திருத்துகின்ற பேராசிரியரின் கவனக் குறைவால்தான் ஏற்படுகிறது.

இதனால், ஏழை மாணவர்களும் பாதிக்ப்படுகிறார்கள் என்பதால் அண்மையில் தலைமைத் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பல்கலைக்கழகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

அதன்படி, மாணவர் ஒருவர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அந்தத் தாளை திருத்திய பேராசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதோடு, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு தேர்வுத் தாள் திருத்தும் பணியிலிருந்தும் அவர் நீக்கப்படுவார் என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement