Ad Code

Responsive Advertisement

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் சிடி வடிவில் பாடத்திட்டம்!

பள்ளி பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், சிடி வடிவில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் முதன்மை செயலர் சபிதா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், மாணவர்களின் சேர்க்கை விபரம், கற்பிக்கும் முறை, ஆங்கில வழிக்கல்வி, தேர்ச்சி விகிதம், காலி பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி பேசியதாவது: மூன்று ஆண்டுகளில், 64 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1000 புதிய பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு, 5 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது.

மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த, சிடி வடிவில் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிற துறைகளில் இல்லாத வகையில், பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு, அமைச்சர் வீரமணி பேசினார்.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா பேசுகையில், "அனிமேஷன் முறையில் பாடத்திட்டங்கள் சிடி வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து படிக்க இயலும். இந்த புதியநடைமுறையை, கையாள்வது குறித்த சிறப்பு பயிற்சி, ஆசிரியர்களுக்கு பாடவாரியாக வழங்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்கள் அடங்கிய சிடி தொகுப்பு, ஒரு வாரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும்" என்றார்.

இக்கூட்டத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைமை ஆசிரியர்கள் நடுக்கம்: ஆய்வு கூட்டத்தில், ஊட்டி, திருப்பூர் மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கு குறைவாகவும், கோவை மாவட்டத்தில் 85 சதவீதத்திற்கு குறைவாகவும் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களிடம் தனித்தனியாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா காரணங்களை கேட்டறிந்தார்.

முதன்மை செயலரின் கேள்விகளுக்கு பதிலளிக்க இயலாமல், தலைமையாசிரியர்கள் சிலர் நடுக்கத்துடன் தலைகுனிந்து நின்றனர். வரும் தேர்வுகளில் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தலைமையாசிரியர்கள் மத்தியில் இது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement